இங்கேயும் இருக்கிறது ஆபத்து...!


இங்கேயும் இருக்கிறது ஆபத்து...!
x
தினத்தந்தி 6 Feb 2018 1:01 PM IST (Updated: 6 Feb 2018 1:01 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பவர்கள் சரியான வழிமுறைகளை பின்பற்றினால் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

ப்படியும் ஒரு சம்பவம் நடக்குமா? என்பது போன்ற விபரீத நிகழ்வு ஒன்று மும்பையில் நடந்துள்ளது. அது பரிதாபமான சம்பவமும் கூட. அதாவது, மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரி ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினரை பார்க்க சென்ற ஒருவர் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தில் சிக்கி பலியாகி இறந்த துயர சம்பவம் தான் அது. அவருடைய பெயர் ராஜேஷ் மாருதி. 32 வயதான அவர், மும்பை லால்பாக் பகுதியை சேர்ந்தவர்.

அவருடைய சகோதரியின் மாமியார் லட்சுமிபாய் என்பவர் மும்பை மாநகராட்சி ஆஸ்பத்திரி ஒன்றில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவரை பார்ப்பதற்காக ராஜேஷ் மாருதி அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது, லட்சுமிபாய்க்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டி இருந்தது. அவருக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துக்கொண்டு ராஜேஷ் மாருதி எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையத்துக்குள் நுழைந்தார். அந்த சமயத்தில், ஸ்கேன் எந்திரம் செயல்பாட்டில் இருந்தது. இரும்பு சிலிண்டரை கையில் வைத்திருந்ததால், திடீரென ஸ்கேன் எந்திரத்தின் காந்த தன்மை அவரை சுருட்டி இழுத்தது. சில நிமிடங்களில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்துக்கு ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் கவனக்குறைவும் ஒரு வகையில் காரணமாக சொல்லப்படுகிறது. எது எப்படியென்றாலும், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டி இருப்பவர்களுக்கு இந்த நிகழ்வு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படியொரு நிகழ்வு ஏற்படாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்ய வேண்டும் என்பது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டீன் வசந்தாமணி தெரிவித்ததை பார்க்கலாம்:-

எம்.ஆர்.ஐ. (மேக்னடிக் ரிசொன்ஸ் இமேஜிங்) ஸ்கேன் என்பது சக்தி வாய்ந்த காந்த அலைகளை உடல் உள்ளே செலுத்தி நுண்ணிய அதிர்வுகளை உருவாக்கி உடல்கூறு பிம்பங்களை கருவி மூலம் அறியும் ஒரு பரிசோதனை ஆகும். இதன் மூலம் நோயாளிகளை படுக்கை கருவியின் மையத்தில் படுக்க வைத்து, பெரிய மின்காந்தத்தின் மூலம் தேவையான உடல் உறுப்புகள் பிம்பம் எடுக்கப்படுகிறது.

இந்த முறையில் பின்விளைவுகள் இன்றி மிகத் துல்லியமாக நோய்க்கான காரணங்கள், உள் உறுப்புகளின் செயல்திறன் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். இது கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைவருக்கும் பாதுகாப்பானது.

அதே வேளையில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரத்தில் உள்ள சக்திவாய்ந்த காந்தம், இரும்பு சம்பந்தமான உலோகங்களை ஈர்க்கும் என்பதால், நோயாளிகள் மட்டுமின்றி, அவருடன் இருப்பவர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதன்படி, நோயாளிகள் உடன் செல்பவர்கள் மற்றும் பணியாளர்களிடம் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் இல்லை என்பதை உலோகத்தை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும். அவர்களை பரிசோதனை செய்த பிறகே ஸ்கேன் மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும். மேலும், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கும் முன்பு பின்பற்ற வேண்டிய முறைகளை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையத்தின் வரவேற்பறை, கருவி இருக்கும் அறையின் வாயில் ஆகிய இடங்களில் தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும்.

நோயாளிகளிடமும், உறவினர்களிடமும், ஒப்புதல் கடிதத்தில் அவர்களுக்கு தெரிந்த மொழியில் கருவி இருக்கும் அறைக்குள் செல்வதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அச்சிடப்பட்ட காகிதத்தை படிக்க வைத்து, அதில் அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும்.

காது கேட்பதற்கான கருவி பொருத்தி இருப்பவர்கள், இருதய துடிப்பை சீர்படுத்தும் செயற்கை உபகரணம் பொருத்தி இருப்பவர்களை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இருக்கும் அறைக்குள் அனுமதிக்க கூடாது. அப்படி அனுமதித்தால் கருவிகள் செயல் இழந்துவிடும். நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் இருந்து உறுப்பு கவ்விகள், கைக்கெடிகாரம், மொபைல் போன் மற்றும் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அகற்றிய பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்.

கூர்மை தன்மை வாய்ந்த பொருட்கள், பிளேடு, கத்தி, ஆக்சிஜன் சிலிண்டர், ஸ்டாண்டு முதலியவற்றை கண்டிப்பாக உள்ளே கொண்டு செல்லக்கூடாது. ஸ்கேன் செய்து கொள்ளும் நோயாளிகள் மருத்துவமனையில் கொடுக்கும் மேலாடையை உபயோகிக்க வேண்டும்.

அசம்பாவிதமாக இரும்புப் பொருளுடன் எவரேனும் உள்ளே சென்றால் மின் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு எந்திரத்தில் ஒட்டிக் கொள்வார்கள். அவர்களை விடுவிக்க கியூன்ச் என்று சொல்லக்கூடிய பட்டன் அழுத்தப்படும். ஒரு சில நிமிடங்களில் மின்காந்தத்திற்கு காரணமான ஹீலியம் வாயு விண்ணில் வெளியேற்றப்படும். உடனே சுற்றி இருந்த மின்காந்தமானது காந்தமற்ற பொருளாக மாறி விடும். அதன் பிறகே எந்திரத்தில் ஒட்டிக்கொண்டவர்கள் தானாக விடுவிக்கப்படுவார்கள். இல்லாத பட்சத்தில் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

எனவே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பவர்கள் சரியான வழிமுறைகளை பின்பற்றினால் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story