பேட்டையில் குடிநீர் திட்ட பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் ஆர்ப்பாட்டமும் நடத்தியதால் பரபரப்பு


பேட்டையில் குடிநீர் திட்ட பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் ஆர்ப்பாட்டமும் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Feb 2018 3:00 AM IST (Updated: 6 Feb 2018 6:41 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் திட்ட பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பேட்டையில் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

நெல்லை,

குடிநீர் திட்ட பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பேட்டையில் வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டமும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் திட்டம்

நெல்லை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி சார்பில் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அங்குள்ள தாமிரபரணி தடுப்பணையில் உறைகிணறு அமைக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

அந்த தண்ணீர் பேட்டை மாநகராட்சி பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் ஏற்றப்பட்டு அங்கிருந்து நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு தினமும் 500 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு வரப்பட்டு சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

குழாய் பதிக்கும் பணி

இதற்காக பேட்டையில் உள்ள சேரன்மாதேவி ரோட்டில் அம்மா உணவகத்தில் இருந்து ரொட்டிக்கடை முக்கு வரையில் ஒரு கட்டமாகவும், ரொட்டிக்கடை முக்கில் இருந்து குளத்தங்கரை பள்ளிவாசல் வரை மற்றொரு கட்டமாகவும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பகுதியில் மட்டும் ரோட்டின் இருபுறமும் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளதால், நடுரோட்டில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இன்னமும் பணிகள் நடந்து வருகிறது.

போக்குவரத்து மாற்றம்

இதையொட்டி பேட்டை வழியாக செல்லும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தற்போது ரொட்டிக்கடை பகுதியை தவிர்த்து பழைய பேட்டை, திருப்பணிகரிசல் குளம் இணைப்பு சாலை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் மாணவ–மாணவிகள், வியாபாரிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பேட்டையில் சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைப்பதுடன், போக்குவரத்தை சீரமைக்குமாறு பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தினர். ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் மெதுவாகவே நடந்து வருகின்றன.

கடையடைப்பு போராட்டம்

இந்த நிலையில் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பேட்டை பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேட்டையில் மெயின்ரோடு உள்பட பல்வேறு இடங்களில் உள்ள 650 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் பேட்டை வியாபா£ரிகள் சங்க தலைவர் சுல்தான் அலாவுதீன் தலைமையில் மல்லிமால் தெருவில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் அப்துல் அஜிஸ், பொருளாளர் மணி மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story