மொடக்குறிச்சியில் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி: அரசு சித்தமருத்துவரிடம் 5½ பவுன் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


மொடக்குறிச்சியில் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி: அரசு சித்தமருத்துவரிடம் 5½ பவுன் நகை பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Feb 2018 3:30 AM IST (Updated: 7 Feb 2018 12:03 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சியில் அரசு சித்த மருத்துவரிடம் மர்ம நபர் 5½ பவுன் நகையை பறித்து சென்றான். மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்தது.

ஈரோடு,

மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சித்த மருத்துவராக இருப்பவர் சுகந்தி (வயது 54). இவர் அந்த பகுதியில் உள்ள முத்துச்சாமி காலனியில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். சுகந்தியின் மகன் சென்னையில் வேலை பார்க்கிறார். மகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். அதனால் சுகந்தி மட்டும் வீட்டில் தனியாக உள்ளார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டின் பின் கதவை யாரோ உடைக்கும் சத்தம் கேட்டது. தூங்கிக்கொண்டு இருந்த சுகந்தி சத்தம் கேட்டு எழுந்து பின்பக்கம் சென்று பார்த்தார். அப்போது யாரோ ஒரு மர்ம நபர் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான்.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகந்தி ‘திருடன் திருடன்‘ என்று கத்தினார். அதற்குள் செல்போன் டார்ச் லைட்டை சுகந்தியின் முகத்தில் அடித்து அவரை திக்கு முக்காட வைத்த மர்ம நபர், சுகந்தியின் கழுத்தில் இருந்த 5½ பவுன் சங்கிலியை வெடுக்கென பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டான்.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக முத்துசாமி காலனிக்கு அடுத்த வீதியில் வசிக்கும் பழனிச்சாமி என்பவருடைய வீட்டின் முன்பக்க கதவை யாரோ உடைக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு எழுந்த பழனிசாமி ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் கதவை உடைத்துக்கொண்டு இருந்தார்கள். உடனே அவர் சத்தம் போடவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அதன்பின்னர் மொடக்குறிச்சி கே.சி.பி. நகரில் ஒரு வீட்டில் மர்ம நபர்கள் கதவை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளார்கள். அங்கும் வீட்டுக்குள் இருந்தவர்கள் எழுந்து வந்து சத்தம் போட்டதால் மாட்டிக்கொள்வோம் என்று மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.

அதன்பிறகுதான் சித்த மருத்துவர் சுகந்தியின் வீட்டுக்கு சென்று, அவருடைய கழுத்தில் இருந்த நகையை மர்ம நபர் ஒருவன் கொள்ளை அடித்துள்ளான்.

முதல் 2 வீடுகளிலும் கொள்ளை அடிக்க முடியாததால், 3–வதாக கொள்ளையன் ஒருவன் மட்டும் தனியாக சென்று நகையை பறித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீட்டில் ஆட்கள் இருக்கும்போது, துணிச்சலாக மர்ம நபர்கள் சென்று கதவை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றதும், சித்தமருத்துவரிடம் நகை பறித்ததும் மொடக்குறிச்சி பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story