விருதுநகர் தென்பகுதிக்கு பயன்தரக்கூடிய அளவில் குடிநீர் தொட்டி கட்ட வேண்டும், முன்னாள் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


விருதுநகர் தென்பகுதிக்கு பயன்தரக்கூடிய அளவில் குடிநீர் தொட்டி கட்ட வேண்டும், முன்னாள் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Feb 2018 3:00 AM IST (Updated: 7 Feb 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் தென்பகுதிக்கு பயன்தரக்கூடிய வகையில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என முன்னாள் கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி கமிஷனர் சந்திரசேகரனிடம் முன்னாள் கவுன்சிலர்கள் நாகேந்திரன், ரமேஷ், சுந்தர், பேபி காளிராஜன், செல்வரத்தினம், ஜெயக்குமார், வள்ளிக்குட்டி ராஜா, சக்திவேல் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் நகராட்சி 21-வது வார்டில் உள்ள நாராயணமடம் தெருவில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த 28.8.2016 அன்று பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 28.1.2018 அன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டதற்கு நாராயணமடம் தெருவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கு நகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நகரசபை நிர்வாகமும் ஒப்புக்கொண்டு பதில் அளித்துள்ளது.

ஆனால் தற்போது நாராயணமடம் தெருவில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை மதுரை ரோட்டில் கட்டுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விருதுநகர் நகராட்சி பகுதியில் தென்பகுதியில் தான் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. நாராயணமடம் தெருவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டினால் தென்பகுதியில் குடிநீர் வினியோகம் சீரடைய வாய்ப்பு உள்ளது. மேலும் அங்கு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட போதிய இடம் நகராட்சிக்கு சொந்தமாக உள்ளது. எனவே நாராயணமடம் தெருவிலேயே மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அதற்கு வாய்ப்பு இல்லை எனில் புதிய பஸ் நிலையத்துக்கு பின்புறம் உள்ள நகராட்சி இடத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த கமிஷனர் சந்திரசேகரன், தற்போது உள்ள நிலையில் நூற்றாண்டு நிதியில் கட்டவேண்டிய மேல்நிலை குடிநீர் தொட்டியை மதுரை ரோட்டில் தான் கட்ட முடியும் என்றும், இல்லை என்றால் அந்த நிதி ஒதுக்கீட்டினை அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அடுத்து 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு வர உள்ளது. அந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை தென்பகுதி மக்களுக்கு பயன்படக்கூடிய அளவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

நகராட்சி வார்டு சீரமைப்பு பட்டியலில் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும் எனவும் முன்னாள் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த கமிஷனர் சந்திரசேகரன், அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் தூத்துக்குடியில் வார்டு சீரமைப்பு பற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அப்போது இந்த கோரிக்கையை அவரிடம் தெரிவிக்குமாறும் கூறினார். 

Next Story