ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் உழவர் உழைப்பாளர் கட்சி கூட்டத்தில் தீர்மானம்


ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் உழவர் உழைப்பாளர் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 7 Feb 2018 3:30 AM IST (Updated: 7 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்லடம்,

உழவர் உழைப்பாளர் கட்சி (தமிழக விவசாயிகள் சங்கம்) சார்பில் நாராயணசாமி பிறந்தநாள் விழா மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி செயற்குழு கூட்டம் பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து தலைமை தாங்கினார். பொருளாளர் பாலசுப்பிரமணி, மாநில மகளிர் அணி நிர்வாகி ராஜரீகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட தலைவர் கே.சி.எம்.பாலசுப்பிரமணி, கோவை மாவட்ட தலைவர் எஸ்.எல்.பாலசுப்பிரமணி ஆகியோர் வரவேற்று பேசினார்கள். இதில் நாராயணாசாமி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து, வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் உடனடியாக அனைத்து விவசாயிகளுக்கும், வறட்சி நிவாரணமும், பயிர் பாதுகாப்பு தொகையும் உடனே வழங்க வேண்டும். மேலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தின் உயிர்நாடியான பி.ஏ.பி. திட்டத்தில் ஆனை மலையாறு-நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். அத்திக் கடவு- அவினாசி திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்.

தேங்காய் கொப்பரை கிலோவுக்கு ரூ.150 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2500-ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000-ம், மக்காச்சோளம் குவிண்டால் ரூ.2500-ம், மஞ்சள் குவிண்டால் ரூ.15,000-ம் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

நீராபானம் இறக்க முறையான அனுமதியும், வழிகாட்டுதலும் செய்திட வேண்டும். விசைத்தறி தொழிலை காப்பாற்றிட அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளின் விலையும், தீவன விலையும் உயர்ந்து கொண்டே போவதால் பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-ம், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.70-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story