ரவுண்டானா அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ரவுண்டானா அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 7 Feb 2018 4:00 AM IST (Updated: 7 Feb 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலையில் நடைபெற்று வரும் ரவுண்டானா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு பகுதியில் உள்ள காமராஜர் நகரில் இருந்து திருச்சி, மணப்பாறை மற்றும் இனாம்குளத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த இணைப்பு சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. ஆகவே, இந்த சாலையை விரிவுபடுத்தி வாகனங்கள் சிரமமின்றி சென்றுவர ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில், அதே பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை விரிவாக்க மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் தற்போது மெதுவாக நடந்து வருகிறது. இதுவரை சாலை விரிவாக்க பணிகள் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளன. தற்போது மணல் மூட்டைகளை கொண்டு மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ரவுண்டானா மிகவும் பெரியதாக இருக்கிறது. இதனால் சாலையின் அளவு குறுகி விடுகிறது. இதனால் வாகனங்கள் இந்த ரவுண்டானாவை சுற்றி வருவதில் தேவையற்ற சிரமம் ஏற்பட்டு விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. மேலும் தற்காலிக ரவுண்டானா மணல் மூட்டைகளில் இரவில் ஒளிரும் சிவப்பு விளக்குகள் ஒட்டப்படவில்லை.

இதனால் இரவு நேரங்களில் அங்கு மணல் மூட்டைகள் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து ரவுண்டானா அளவை குறைக்க வேண்டும். இரவில் விபத்து ஏற்படாமல் தடுத்திட மணல் மூட்டைகளில் ஒளிரும் சிவப்பு விளக்குகளை பொருத்த வேண்டும். மேலும் ரவுண்டானா அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story