ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலம் மக்களுடன் இணைந்து போராட தயார் டி.டி.வி.தினகரன் பேச்சு


ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலம் மக்களுடன் இணைந்து போராட தயார் டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 7 Feb 2018 4:30 AM IST (Updated: 7 Feb 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக கதிராமங்கலம் மக்களுடன் இணைந்து போராட தயார் என்று, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். கதிராமங்கலம் கிராமத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கதிராமங்கலம் பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன், அன்புமணிராமதாஸ் எம்.பி., ஜி.கே.வாசன், வைகோ, திருநாவுக்கரசர், சீமான், முன்னாள் எம்.பி. மணிசங்கர்அய்யர் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கதிராமங்கலம் மக்களின் காத்திருப்பு போராட்டம் நேற்று 210-வது நாளாக நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று கதிராமங்கலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது கதிராமங்கலம் போராட்டக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கதிராமங்கலம் மக்களின் பிரச்சினை குறித்து பேசியதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க யார் முன்வந்தாலும் அதை வரவேற்போம். காவிரி படுகை பாதிக்கப்பட்டால் தமிழகத்தின் வளமே போய்விடும். எனவே விவசாயத்தையும், நிலத்தடிநீரையும் பாதிக்கும் வகையில் செயல்படும் ஓ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்த வேண்டும். மத்திய- மாநில அரசுகள் இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கதிராமங்கலத்தில் குடிநீர் கெட்டு விட்டது என கூறி தண்ணீர் பாட்டில் ஒன்றையும், கதிராமங்கலம் கதறல் என்ற குறுந்தகட்டையும் தினகரன் எம்.எல்.ஏ.விடம் மக்கள் கொடுத்தனர். பின்னர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கதிராமங்கலம் மக்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கதிராமங்கலம் பிரச்சினை தொடங்கிய போது ஜெயலலிதா உயிரோடு இல்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இருப்பினும் தற்போது கதிராமங்கலம் மக்களின் பிரச்சினையை தீர்க்க அவர்களுடன் இணைந்து போராடுவோம். எங்கள் ஆட்சி அமைந்தவுடன் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்றவும், மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காவிரி படுகையை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் விவசாயம் தான் மிக முக்கியமான தொழிலாக இருக்கும். இதற்கு தண்ணீர் அவசியம். தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ரெங்கசாமி, செந்தில்பாலாஜி, மற்றும் திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், மணலூர் சுந்தர்ராஜன், யு.சேட்டு, மகேந்திரன், வீரமார்த்தாண்டன், மனோகரன் உள்பட பலர் இருந்தனர்.



Next Story