மேற்கூரை வழியாக வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை வனத்துறையினரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


மேற்கூரை வழியாக வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை வனத்துறையினரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2018 3:08 AM IST (Updated: 7 Feb 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

மறையூர் அருகே மேற்கூரை வழியாக வீட்டுக்குள் காட்டெருமை விழுந்தது. காட்டெருமையை வெளியேற்ற விடாமல் வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்.

மறையூரை அடுத்துள்ள பள்ளநாடு பகுதியில் மூணாறு–மறையூர் மாநில சாலையில் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. மலையடிவாரத்தை ஒட்டி இவருடைய வீடு உள்ளது. இந்தநிலையில் ராம்குமார் குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த காட்டெருமை தாழ்வான பகுதியில் இருந்த ராம்குமார் வீடு மீது விழுந்தது.

இதனால் மேற்கூரை உடைந்து வீட்டுக்குள் காட்டெருமை விழுந்தது. இதனால் அங்கு பயங்கர சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டனர். பின்னர் வீட்டுக்கு காட்டெருமை விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டுக்குள் இருந்த டி.வி., நாற்காலி, கட்டில் உள்ளிட்ட உபகரணங்களை காட்டெருமை சேதப்படுத்தியது. இதையடுத்து காட்டெருமையை வீட்டில் இருந்து வெளியேற விடாமல் பொதுமக்கள் பூட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டெருமையை வீட்டை விட்டு வெளியேற்ற முயன்றனர். ஆனால் பொதுமக்கள் காட்டெருமையை வெளியேற்ற விடாமல் தடுத்து வனத்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து மறையூர் பஞ்சாயத்து தலைவர் ஜோமோன் தாமஸ், மாவட்ட வன அலுவலர் அப்சல் அகமது, வனச்சரகர் ஜோப், மறையூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜன், பஞ்சாயத்து உறுப்பினர் அனு ஆகியோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டெருமை வராமல் தடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்றும், குடியிருப்புக்குள் காட்டெருமைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் அப்சல்அகமது உறுதி அளித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், காட்டெருமையை வீட்டை விட்டு வெளியேற்ற சம்மதித்தனர். இதையடுத்து வீட்டை திறந்தவுடன் காட்டெருமை வெளியேறி சின்னவரை பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் சென்றது. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக சுமார் 8 மணி நேரம் வீட்டுக்குள் காட்டெருமை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story