தரமற்ற பாகு மூலம் வெல்லம் தயாரித்ததாக புகார்: கரும்பு ஆலைக்கு ‘சீல்’ வைப்பு


தரமற்ற பாகு மூலம் வெல்லம் தயாரித்ததாக புகார்: கரும்பு ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 7 Feb 2018 4:30 AM IST (Updated: 7 Feb 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே தரமற்ற பாகு மூலம் வெல்லம் தயாரித்ததாக புகார் வந்ததை அடுத்து, கரும்பு ஆலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் 150 டின்களில் வைக்கப்பட்டு இருந்த கரும்பு பாகு பறிமுதல் செய்யப்பட்டது.

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த காமலாபுரம் பிரிவு ரோடு பகுதியில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான கரும்பு ஆலை உள்ளது. இந்த ஆலையை உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த நவாப் (வயது 35) என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த ஆலையில், கரும்பு பாலுக்கு பதில் கரும்பு கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட தரமற்ற பாகை பயன்படுத்தி வெல்லம் தயாரிக்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மாரியப்பனுக்கு புகார் சென்றது. அதன்பேரில் ஓமலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகநாதன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், அந்த கரும்பு ஆலைக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது கேனில் அடைக்கப்பட்ட திரவம் போன்ற தரமற்ற பாகை ஊற்றி வெல்லம் தயாரிப்பது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் அந்த கரும்பு ஆலையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த தலா 22 கிலோ எடை கொண்ட 55 டின்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த கரும்பு பாகுவை பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையை தொடர்ந்து, பல்பாக்கியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கரும்பு ஆலையின் குடோனில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். இதில் அங்குள்ள 2 அறைகளில் 150 டின்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாகுவை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனே அந்த 2 அறைகளுக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இதுபற்றி கரும்பு வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சதீஷ்குமார் கூறியதாவது:-

வட மாநிலத்தில் கரும்பு பாலை, கொதிக்க வைத்து பதப்படுத்தி பாகு வழவழப்பாக மாறிய பின்னர் அதனை கேனில் அடைத்து தமிழகத்திற்கு கொண்டு வருகின்றனர். பின்னர் அதனை மீண்டும் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பாகு ஆக்கி இங்கு வெல்லம் தயாரித்து வருகின்றனர்.

இதனால் தமிழகத்தில் கரும்பு விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்படும். மேலும் அந்த கேனில் அடைக்கப்பட்டுள்ளவை, கரும்பு பாலா அல்லது கரும்பு பால் கழிவாக என்பது நமக்கு தெரியாது. இதனால் அந்த வெல்லத்தால் உடல்நலத்திற்கு கேடு ஏற்படுமா? என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். இந்த கேன் பாலில் இருந்து வெல்லம் தயாரிப்பதை முற்றிலும் தடை செய்யவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story