நாலச்சோப்ராவில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு வசாய் - விரார் மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் ரத்து


நாலச்சோப்ராவில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு வசாய் - விரார் மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் ரத்து
x
தினத்தந்தி 7 Feb 2018 4:54 AM IST (Updated: 7 Feb 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

நாலச்சோப்ராவில் இறைச்சி கடைகளை மூட வசாய்- விரார் மாநகராட்சி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் 550 கிலோ மாட்டிறைச்சியை கடந்த டிசம்பர் 15, 16-ந் தேதிகளில் போலீசார் பறிமுதல் செய்தனர். மராட்டியத்தில், மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், இதனை மிகவும் தீவிரமாக கருதிய வசாய்- விரார் மாநகராட்சி அதிகாரிகள், நாலச்சோப்ரா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து தான், அந்த மாட்டிறைச்சி கொண்டு வரப்பட்டிருக்கும் என்று சந்தேகப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, நாலச்சோப்ராவில் உள்ள இறைச்சி கடைகளை மூடுமாறு கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அவர்களது கடை லைசென்சையும் ரத்து செய்தனர். இதனால், இறைச்சி கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாநகராட்சியின் உத்தரவை ரத்து செய்ய கோரி, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், “நாங்கள் அங்கீகாரம் பெற்ற இறைச்சி விற்பனையாளர்கள். மாநில அரசு அங்கீகரித்த இறைச்சிகளை மட்டுமே விற்பனை செய்கிறோம். தானேயில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி கூடத்தில் இருந்து தான் அவற்றை வாங்குகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

அத்துடன், இறைச்சி வாங்கியதற்கான கட்டண ரசீதையும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.ஒகா, பி.என்.தேஷ்முக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் முன்வைத்த வாதத்தில், “நாலச்சோப்ராவில் பரவலாக மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதை நாங்கள் அறிவோம். எனினும், மனுதாரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை” என்று குறிப்பிட்டார். வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநகராட்சிக்கு சரமாரி கேள்வி எழுப்பினர். அதன் விவரம் வருமாறு:-

எதன் அடிப்படையில் இறைச்சி கடை லைசென்சை மாநகராட்சி ரத்து செய்தது? வெறும் சந்தேகம் மட்டும் போதுமா? மனுதாரர்கள் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் வெளிப்படையாக மீறாத போதிலும், அவர்களது லைசென்சை ரத்து செய்வது தான் நடைமுறையா?

முதலாவதாக, மனுதாரர்கள் விதிகளை மீறியதாக, எந்த இடத்திலும் மாநகராட்சி குற்றம்சாட்டவில்லை. இரண்டாவதாக, அவர்கள் மாட்டிறைச்சி விற்றதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஆகையால், இறைச்சி கடைகளை இழுத்து மூடுமாறு மாநகராட்சி பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது. இது ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story