மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து; யாருக்கு எச்சரிக்கை?
மனித உயிர் போக வேண்டாம் என கருணை உள்ளத்தோடு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் மனிதர்களுக்கு அளித்திருக்கும் எச்சரிக்கை இது.
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் நிகழ்ந்த தீவிபத்துக்கு இந்து அறநிலையத்துறையின் மெத்தன போக்கே காரணம். அங்கு வேலை செய்கின்ற அலுவலர்களுக்கு, நிர்வாகத்தில் அக்கறையோ, கவனமோ, பொறுப்போ கிடையாது. எதற்கு எடுத்தாலும் பணம். பணம் கொடுத்தால் மீனாட்சி-சுந்தரேஸ்வரரை பக்கத்தில் நின்று தரிசனம் செய்யலாம். இந்த தீவிபத்து சாதாரண தீவிபத்து அல்ல. மிகமிக பயங்கரமான தீவிபத்து. சிவபெருமான், பார்வதிதேவி ஆகியோரின் கோபமும், ஞானிகளின் சாபமும் இந்த தீவிபத்தில் பங்கெடுத்துள்ளன. இந்த விபத்து பகலில் நடந்திருந்தால் மனித உயிர் சேதம் மிக, மிக அதிகமாக இருந்திருக்கும். மனித உயிர் போக வேண்டாம் என கருணை உள்ளத்தோடு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் மனிதர்களுக்கு அளித்திருக்கும் எச்சரிக்கை இது. ஆலய வளாகத்தில் இப்படிப்பட்ட பயங்கரமான தீவிபத்து கோவில் வரலாற்றில் நிகழ்ந்ததே இல்லை.
கோவிலுக்குள் இருக்கும் கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். கோவில்களை வியாபார இடமாக மாற்றக்கூடாது. 50 ஆண்டுகளுக்கு முன்பு அறநிலைய பாதுகாப்பு துறை என்று இருந்தது. நிகழ்காலத்தில் ‘பாதுகாப்பு’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்கள். அதனால் கோவில்களில் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த தீ விபத்தின் மூலம் ஒழுக்கம், பண்பாடு இன்றி பதவி ஆணவம் பிடித்து அலையும், பணத்தையே குறிக்கோளாக கொண்டு அலைகின்ற மனிதர்களுக்கு மரண அடி கொடுக்கப்பட்டு உள்ளது.
இனி சைவ, வைணவ ஆலயங்களை சைவர்கள், வைணவர்கள் பொறுப்பில் ஒப்படைத்து விடலாம். ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆலயங்களை ஆங்காங்கே உள்ள முக்கியஸ்தர்கள், பக்தர்கள் பொறுப்பில் கொடுத்து விடலாம். அரசாங்கம் அந்த நிர்வாகத்தை கண்காணித்து, கணக்குகள் முறையாக எழுதப்படுகிறதா? என்று தணிக்கை செய்யலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றால், இப்போது இருக்கின்ற ‘இந்து சமய அறநிலையத்துறை’ என்பதை நீக்கி விட்டு ‘சைவ, வைணவ சமய பாதுகாப்புத்துறை’ என்று உருவாக்கிட வேண்டும். ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், நிர்வாக அதிகாரிகள், தணிக்கைத்துறை அதிகாரிகள், அனைவருக்குமாக சேர்த்து சைவ, வைணவ அறநிலைய பாதுகாப்புத்துறை பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும்.
மேலும், நீதியரசர்கள் நீதிமன்ற மரபுப்படி ஆடை அணிந்து வருகின்றார்கள். காவல் துறை அதிகாரிகள் காவல் துறை சட்டப்படி சீருடை அணிந்து வருகிறார்கள். அதுபோல ஆலயங்களிலே பணி செய்யும் அதிகாரிகள் பட்டு வேட்டி, இடுப்பில் பட்டு அங்கவஸ்திரம் அணிந்து வரவேண்டும். இப்படி உடை உடுத்தி வருவதை நாமே நேரில் பார்த்து மகிழ்ந்து இருக்கிறோம். இப்போது பணி செய்கின்ற மேலே குறிப்பிட்டுள்ள பல அதிகாரிகளுக்கு சைவ சமயம் என்றால் என்ன? வைணவ சமயம் என்றால் என்ன? என்பது தெரியாது. ஆதீனம் என்றால் என்ன? மடம் என்றால் என்ன? என்பதும் தெரியாது. குருமகா சன்னிதானம் என்றால் என்ன? மடாதிபதி என்றால் என்ன? என்பதும் தெரியாது. ஆதீனத்தின் சம்பிரதாயங்கள், மரபுகளும் தெரியாது. அக்காலத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் பணிப்பொறுப்பேற்கும் போது நேரம் கேட்டு குருமகா சன்னிதானத்தை சம்பிரதாயப்படி தரிசித்து ஆசீர்வாதம் பெற்றார்கள். நிர்வாகம் நடத்துவதற்கான ஆலோசனைகளையும் கேட்டு பெற்றார்கள். இப்போதெல்லாம் அதிகாரிகள் எல்லாவற்றிலும் கமிஷன் என்று போய்க்கொண்டு இருக்கிறார்கள். அதிகாரிகள் பலருக்கும் பண்பாடு, பணிவு, பவ்யம், உண்மையான பக்தி கிடையாது. கோவில்கள், வணிக நிறுவனங்களாக காட்சி அளிக்கின்றன. இதனால் கோவிலுக்கும் வருமானம், இவர்களுக்கும் வருமானம் வருகிறது.
மதுரை ஆதீனத்துக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் பல கட்டளைகள் இருக்கின்றன. ஒவ்வொரு திருவிழாவிற்கும் பல்லாயிர கணக்கான ரூபாய் செலவு செய்து, அங்கு சாமிக்கு திருக்கண் சாட்டுவதும், அபிஷேக ஆராதனைகள் செய்வதும், 2 ஆயிரத்து 500 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. எந்த திருவிழா பத்திரிகையும் சிவாச்சாரியார்களை ஆதீனத்திற்கு அழைத்து வந்து பிரசாதங்களை சன்னிதானம் முன்பு சமர்ப்பித்து இணை ஆணையரோ மற்ற அலுவலர்களோ ஆதீனத்திற்கு நேரடியாக வழங்கி ஆசீர்வாதம் பெற்று செல்வது வழக்கம். ஆனால், தற்போது இதை செய்வதே இல்லை. சுவாமி, அம்பாள் எப்போது புறப்பாடு ஆகி தெற்காவணி மூல வீதிக்கு வருகிறது என்பதை நமக்கு தெரிவிப்பது இல்லை.
மாசித் திருவிழாவோ, சித்திரை திருவிழாவோ எதற்கும் தகவல் தெரிவிப்பதில்லை. சுவாமி வருகின்ற தேதியும், நேரத்தையும் ஆதீன சிப்பந்திகளை கோவிலுக்கு அனுப்பி வைத்து தெரிந்துகொண்டு பட்டு வஸ்திரங்கள், தேங்காய், பழம், மாலைகள் இவற்றையெல்லாம் தயார் செய்து திருக்கண் சாட்டுகின்ற நிலையில் ஆதீனம் இருக்கின்றது.
எனவே, கோவிலுக்குள் இருக்கின்ற கடைகள் அனைத்தையும் அகற்றிட வேண்டும். ஆலயங்களில் ஊழல் செய்கின்ற அதிகாரிகளை உடனடியாக ஜாமீன் வழங்க முடியாத சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை வழங்க தொடங்கினால் தான் கோவில்கள் அனைத்திலும் கண்ணியமிக்க நிலையில், நிர்வாகம் நடைபெறும்.
சமயம் என்றால், சைவ சமயம்; வைணவ சமயம். இதில் எல்லா சமயங்களும், எல்லா மூர்த்திகளும் அடக்கம். சிவலிங்கத்தில் மூன்று பாகங்கள் உள்ளன. அடிப்பாகம் பிரம்ம பாகம், நடுப்பாகம் விஷ்ணு பாகம், மேல்பாகம் சிவபாகம். எனவே, அனைத்து மூர்த்திகளின் பெயர்களும், அம்பாள் பெயர்களும் சிவலிங்க வழிபாட்டில் அடக்கமாக இருக்கின்றது. எனவே தான் சைவ, வைணவ சமய பாதுகாப்புத்துறை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றோம்.
‘இந்து’ என்ற சொல் நமது சைவ சித்தாந்தத்திலோ, சாஸ்திரங்களிலோ, ஸ்தோத்திரங்களிலோ கிடையாது. எனவே, நமது சமய அமைப்புகளை இனி சைவ, வைணவ முன்னணி என்றும், சைவ, வைணவ மன்றம் என்றும் குறிப்பிட வேண்டும். சிவனை வழிபடுகிறவர்கள், அம்பாளை வழிபடுகிறவர்கள், விநாயகர், முருகபகவானை வழிபடுபவர்கள் சைவர்கள். பெருமாளை வழிபடுகிறவர்கள் வைணவர்கள். நமது சைவ சமய சட்டப்படி சைவர்கள் பெருமாள் கோவிலுக்கும் சென்று வழிபடலாம். பெருமாளை வழிபடுகிற வைணவர்கள் சிவாலயங்களுக்கும் சென்று வணங்கலாம். தவறே இல்லை. நாமும் (மதுரை ஆதீனம்) பெருமாள் ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து அங்குள்ள மரியாதைகளை ஏற்றுக்கொள்கிறோம்.
ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம்
Related Tags :
Next Story