சுற்றுச்சூழலை கற்றுக்கொடுப்போமா?
இயற்கை மீதான கரிசனத்தை பள்ளியில் இருந்தே மாணவர்களுக்கு புகட்ட வேண்டும்.
பூமியில் கடந்த சில ஆண்டுகளாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. இயற்கை சீற்றங்களால் பேரழிவும் நிகழ்ந்து வருகிறது. இது மனித உயிர்களையும், பிற உயிர்களையும் கொன்று குவிக்கிறது. இதனால், வருங்கால சந்ததிகள் நிம்மதியாக, அமைதியாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பூமியில் மாசுபாடும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இந்த சுற்றுச்சூழல் சீர்கேடுகளை தடுக்க சுற்றுச்சூழல் கல்வி அவசியமாகும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு அந்தந்த பாடங்களில் பட்டம் பெற்ற ஆசிரியர்களை அரசாங்கம் ஆசிரியர்களாக நியமித்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறது. ஆனால் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும், அனைத்து கல்லூரிகளிலும் சுற்றுச்சூழல் கல்வி பாடம் பல ஆண்டுகளாக உள்ளது. ஆனால் அதற்கென தனி ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், ஏற்கனவே உள்ள ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்தப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு அந்த பாடத்தின் முக்கியத்துவம் தெரிவதில்லை.
காடுகளில் இருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதால் மழைவளம் குறைந்துவிட்டது. விளை நிலங்கள் வீட்டுமனைகளாக எழுந்து நிற்கின்றன. உலகின் ஒருபுறம் உணவு பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. நிலம், நீர், காற்று மாசுபாட்டால் விதவிதமான நோய்கள் அடியெடுத்து வைக்கின்றன. இயற்கை சமச்சீர் வேறுபாட்டால் அழிவுகள் அதிகரிக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளில் என்னதான் முன்னேற்றம் அடைந்தாலும் இயற்கை அழிவிலிருந்து யாரும் தப்பமுடியாது. இவற்றையெல்லாம் தடுக்க ஒரேவழி தற்போதுள்ள சந்ததியினருக்கு சுற்றுச்சூழலை பேணிக்காப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைப்பதுதான். இயற்கை மீதான கரிசனத்தை பள்ளியில் இருந்தே மாணவர்களுக்கு புகட்ட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஏற்கனவே இருக்கும் இப்பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொதுத்தேர்வுகளிலும் இந்த பாடம் இடம்பெற வேண்டும். சுற்றுச்சூழல் கல்வி முடித்தவர்களை ஆசிரியர்களாக நியமித்து பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவியர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த அக்கறையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எண்ணமாக இருக்கிறது.
-உமா, கள்ளக்குறிச்சி
Related Tags :
Next Story