பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கிலி பறிப்பு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை


பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கிலி பறிப்பு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 8 Feb 2018 6:59 AM IST (Updated: 8 Feb 2018 6:59 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளமடம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ஜெபா. கொத்தனார். இவருடைய மனைவி மேரி சூசன்னாள்(வயது 36).

இவர் நேற்று காலை உடல்நிலை சரியில்லாத தனது மகன் ஜஸ்டினை(8) அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக வெள்ளமடம் அருகே உள்ள ஒரு தனியார் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

சிகிச்சை முடிந்ததும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து வீட்டிற்கு செல்ல வெள்ளமடம் பஸ் நிறுத்தம் நோக்கி மகனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேர் வந்தனர். அதில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி, மேரி சூசன்னாள் பின்னால் நடந்து வந்தான். மற்றொருவன் சிறிது தூரம் தள்ளி மோட்டார்சைக்கிளில் நின்று கொண்டிருந்தான். மேரி சூசன்னாள் அருகில் வந்த நபர் திடீரென்று அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மேரி சூசன்னாள் சங்கிலியை பிடித்துக்கொண்டு அந்த நபரிடம் போராடினார்.

இருப்பினும் அந்த நபர் சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தயாராக நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றான். நகையை பறிக்கவிடாமல் போராடியதில் மேரி சூசன்னாளுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.

அப்போது, அந்த வழியாக வந்தவர்கள் இதைகண்டு மர்மநபர்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். உடனே மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து மேரி சூசன்னாள் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story