20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 7:10 AM IST (Updated: 8 Feb 2018 7:10 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.

வேலூர்,

வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாதத்துக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும். பேரிடர் மேலாண்மைப் பணிக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 2 கட்டங்களாக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து 3-ம் கட்டமாக பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று வருவாய்த்துறையினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டம் நடத்தினர். இதனால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகங்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 தாலுகா அலுவலகங்களைச் சேர்ந்த தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர், அலுவலக உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் 450 பேர் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வருவாய்த்துறையினரின் தற்செயல் விடுப்புப் போராட்டம் காரணமாக அலுவலகங்களுக்குப் பல்வேறு சான்று பெற வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இப்போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறுகிறது. 

Next Story