தா.பேட்டையில் ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்


தா.பேட்டையில் ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 8 Feb 2018 2:16 AM GMT (Updated: 8 Feb 2018 2:16 AM GMT)

தா.பேட்டையில் ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

தா.பேட்டை,

தா.பேட்டை ஒன்றியம் கரிகாலி ஊராட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் பணிகள் நடைபெறவில்லலை. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கரிகாலி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இத்திட்டத்தில் சுமார் 900 விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக பணி வழங்கவில்லை, ஏற்கனவே செய்த பணிகளுக்கு கூலித்தொகையும் வழங்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த கரிகாலி, உத்தணடம்பட்டி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் விவசாய தொழிலாளர்கள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேசிய ஊரக வேலைத்திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கல்விநாயகம், பணி மேற்பார்வையாளர் வேங்கடசுப்ரமணியன் ஆகியோர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

தா.பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், முத்துசாமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தற்போதைய நிலையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தினசரி வேலை வழங்கிட போதிய நிதி இல்லை. நிதி ஒதுக்கீடு செய்த பின்னர் பணி வழங்குவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் சென்று முறையிடப்போவதாக கூறி கலைந்து சென்றனர். நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு பெண் தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story