வருவாய்த்துறை அலுவலர்கள் 375 பேர் பணிக்கு வரவில்லை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்


வருவாய்த்துறை அலுவலர்கள் 375 பேர் பணிக்கு வரவில்லை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:01 AM GMT (Updated: 8 Feb 2018 3:01 AM GMT)

தஞ்சை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் 375 பேர் நேற்று பணிக்கு வரவில்லை. அவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய்த்துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8-வது ஊதியக்குழு பரிந்துரையில் 1-1-2016 முதல் நிலுவைத்தொகை வழங்க வேண்டும். 8-வது ஊதியக்குழு பரிந்துரையில் வருவாய்த்துறை ஊழியர்களின் ஊதிய நிர்ணயத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் 48 மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் தாசில்தார் அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என வருவாய்த்துறை ஊழியர்கள் 486 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 375 பேர் நேற்று பணிக்கு வரவில்லை. இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் (வியாழக்கிழமை) இந்த போராட்டம் நடைபெறு கிறது. 

Next Story