தற்கொலை செய்துகொண்ட மருந்து விற்பனை பிரதிநிதியின் உடலை வாங்க மறுத்து அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்


தற்கொலை செய்துகொண்ட மருந்து விற்பனை பிரதிநிதியின் உடலை வாங்க மறுத்து அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:01 AM GMT (Updated: 8 Feb 2018 3:01 AM GMT)

தற்கொலை செய்துகொண்ட மருந்து விற்பனை பிரதிநிதி உடலை வாங்க மறுத்து அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

அந்தியூர்,

அந்தியூர் கொல்லங்கோவில் ஓங்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன். மருந்து விற்பனை பிரதிநிதி. இவர் நேற்று முன்தினம் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘வெளியூரில் மருந்து விற்ற ரூ.7லட்சத்தை சரவணன் கையாடல் செய்ததாக கூறி, அதை திரும்ப செலுத்துமாறு மருந்து நிறுவனம் வற்புறுத்தியதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்’ என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ள அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று முன்தினம் மாலை 3½ மணி அளவில் அவருடைய உறவினர்கள் சுமார் 200 பேர் திரண்டார்கள். பின்னர் அவர்கள் சரவணனின் உடலை வாங்க மறுத்து, அவரது சாவுக்கு காரணமான மருந்து தயாரிப்பு நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திடீரென அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து சரவணனின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டம் விடிய, விடிய நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

இதையடுத்து போலீசார், மருந்து விற்பனை நிறுவனத்தின் நிர்வாகிகள் சென்று சரவணனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது மருந்து விற்பனை நிறுவன நிர்வாகிகள் கூறும்போது, ‘சரவணன் கையாடல் செய்ததாக கூறப்படும் ரூ.7லட்சத்தை திருப்பி கொடுக்க வேண்டாம். மேலும் மனிதாபிமான அடிப்படையில் சரவணனின் 2 குழந்தைகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படும்’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட சரவணனின் உறவினர்கள் மாலை 4 மணி அளவில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டார்கள். பின்னர் 5 மணி அளவில் சரவணின் உடலை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றார்கள்.

இதனால் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story