ரேஷன்பொருட்கள் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி கூட்டுறவு பண்டகசாலையை முற்றுகையிட்ட பெண்கள்


ரேஷன்பொருட்கள் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி கூட்டுறவு பண்டகசாலையை முற்றுகையிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:02 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

ரேஷன்பொருட்கள் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி, போடியில் உள்ள கூட்டுறவு பண்டகசாலையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

போடி,

போடி கீழத்தெருவில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், 1,265 குடும்பத்தினருக்கு ரேஷன்பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் அந்த கடையில் அரிசி வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலானோருக்கு அரிசி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் அன்றைய தினம் மாலையில், ஓட்டல் உரிமையாளர் ஒருவருக்கு அரிசியை விற்பனையாளர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்து விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் ரேஷன் கடையில் இருந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யக்கூடிய சர்க்கரை, பாமாயில் ஆகியவையும் ஓட்டல்களுக்கு விற்பனை செய்வதாக விற்பனையாளர் மீது அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், போடி வள்ளுவர் சிலை அருகே உள்ள கூட்டுறவு பண்டகசாலை அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றனர். பின்னர் அவர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சங்க செயலாளர் பிச்சைமணியை அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போடி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ரேஷன்பொருட்கள் வினியோகத்தில் முறைப்படுத்த வேண்டும் என்றும், விற்பனையாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சங்க செயலாளர் பிச்சைமணி மற்றும் போலீசார் உறுதி அளித்தனர். அதன்பின்னரே பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story