பேரையூர் அருகே தீண்டாமை சுவர் பிரச்சினை: இரு சமூகத்தினரிடமும் கலெக்டர் பேச்சுவார்த்தை


பேரையூர் அருகே தீண்டாமை சுவர் பிரச்சினை: இரு சமூகத்தினரிடமும் கலெக்டர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 8 Feb 2018 3:30 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

பேரையூர் அருகே தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களிடம் கலெக்டர் வீர ராகவராவ் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேரையூர்,

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சந்தையூர் இந்திரா காலனியில் இரு சமூகத்தினர் அருகருகே பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். ஒரு சமூகத்தினர் உள்ள பகுதியில் 2 வருடங்களாக தீண்டாமை சுற்றுச்சுவர் உள்ளதாகவும், அந்த சுவரால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அந்த சுவரை அகற்ற வேண்டுமென்றும் மற்றொரு சமூகத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மேலும், தீண்டாமை சுவரை அகற்றும்வரை ஊருக்குள் வர மாட்டோம் என்று மலைப்பகுதிக்கு குடும்பம், குடும்பமாக சென்று கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். இதனால், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். மலைப்பகுதியிலேயே இருப்பதால் இங்குள்ள 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்புலிகள் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கொண்ட குழுவினர் இரு சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும், மலைப்பகுதியில் குடியிருக்கும் ஒரு சமூகத்தினரை ஊருக்குள் வரவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டது. தீண்டாமைச் சுவரை அகற்றினால்தான் ஊருக்குள் வருவோம் என்று போராட்டக்காரர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் நேற்று போராட்டக்காரர்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கலெக்டர் கூறுகையில், “பிப்ரவரி 20-ந்தேதி மதுரை உயர்நீதிமன்றத்தில் சுவர் பிரச்சினை குறித்து விசாரணை வருகிறது. அதன்பின்னர் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரு சமூகமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. அதனால், போராட்டத்தை கைவிட்டு ஊருக்குள் வரவேண்டும்“ என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதனை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

பின்னர் கலெக்டர் மற்றொரு சமூகத்தினரை சந்தித்து அவர்களிடம் பேசினார். இரு சமூகத்தினரும் ஊரில் உள்ள பிற சமூக முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் ஒருமித்த கருத்து ஏற்பட்டு பலன் கிடைக்கும் என்று கலெக்டர் கூறினார்.

மேலும், சந்தையூர் கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சாக்கடை நீர் தேங்கி சுகாதாரக்கேடு உருவாகி உள்ளது. எனவே சாக்கடை நீரை உடனே அகற்ற வேண்டுமென்று ஊராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

Next Story