நல்லாண்டார்கொல்லையில் அமைக்கப்பட்டு உள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்துளை கிணற்றை மூடும் தொடர் போராட்டம்


நல்லாண்டார்கொல்லையில் அமைக்கப்பட்டு உள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்துளை கிணற்றை மூடும் தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:02 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

நல்லாண்டார்கொல்லையில் அமைக்கப்பட்டு உள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்துளை கிணற்றை மண் கொண்டு மூடும் தொடர் போராட்டத்தை வருகிற 15-ந் தேதி முதல் நடத்த போவதாக பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை, நெடுவாசல் உள்பட 5 இடங்களில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் இயற்கை எரிவாயு எடுக்கும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இதற்கு அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்ததுடன் நேரில் வந்து கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன குரல் கொடுத்தனர்.

பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இந்த திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என்று அவர்களிடம் உறுதி கூறினர். மேலும் மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆழ்துளை கிணற்றை 9 மாத காலத்திற்குள் முழுமையாக அகற்றி நிலத்தை சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதி அளித்து இருந்தார்.

மாவட்ட கலெக்டர் எழுதி கொடுத்தபடி கடந்த டிசம்பர் மாதத்தோடு 9 மாதம் முடிந்து விட்ட நிலையில் ஆழ்துளை கிணற்றை அகற்றும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மாலை திடீரென நல்லாண்டார்கொல்லையில் உள்ள ஆழ்துளை கிணறு அருகே விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தபடி ஆழ்துளை கிணற்றை அகற்றி நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருமுருகன் கூறியதாவது:-

நல்லாண்டார்கொல்லை, நெடுவாசல், வடகாடு, கோட்டைக்காடு, கருக்காகுறிச்சி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகளை 9 மாதத்தில் மூடிவிடுவதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்து இருந்தது. ஆனால் இன்றுவரை அதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை. மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நெடுவாசல் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதியும், சுற்றுச்சூழல் அனுமதியும் கிடைக்கவில்லை என சொல்லி இருப்பது திட்டத்தை இன்னும் கைவிடவில்லை என்பதையே காட்டுகிறது.

ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும்.இல்லை என்றால் விவசாயிகளே மண் கொண்டு மூடும் தொடர் போராட்டத்தை வருகிற 15-ந் தேதி முதல் தொடங்க உள்ளோம்.

இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்பதை மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டுவர வேண்டும். இதேபோல மத்திய அரசால் பிப்ரவரி 15 நெடுவாசல் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் என்பதால் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம விவசாயிகள் வருகிற 15-ந் தேதி(வியாழக்கிழமை) கருப்பு தினமாக அனுசரிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story