பாம்பன் ரோடு பாலத்தில் மீன் வேன் கவிழ்ந்து உருண்டது, 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


பாம்பன் ரோடு பாலத்தில் மீன் வேன் கவிழ்ந்து உருண்டது, 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2018 8:32 AM IST (Updated: 8 Feb 2018 8:32 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரோடு பாலத்தில் மீன் வேன் கவிழ்ந்து உருண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமேசுவரம்,

திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று பாம்பனுக்கு மீன் ஏற்றுவதற்காக ஒரு வேன் ஐஸ் கட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த வேனை தினேஷ் (வயது30) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் காபு, ஆசின் ஆகியோர் வந்தனர்.

நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் இந்த வேன் பாம்பன் ரோடு பாலத்தில் வந்து கொண்டிருந்தது. பாலத்தில் தெருவிளக்குகள் எரியாததால் இருளில் வேகத்தடை இருப்பதை டிரைவர் தினேஷ் கவனிக்கவில்லை.

இதனால் வேகத்தடையின் அருகில் வந்ததும் பதற்றம் அடைந்த அவர் திடீரென பிரேக் பிடித்தார். இதில் அந்த வேன் நிலைதடுமாறி பாலத்தில் கவிழ்ந்து உருண்டது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பாலத்தின் மையப்பகுதியில் வேன் கவிழ்ந்ததால் வேறு எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. சுமார் 2 மணி நேரமாக வாகனங்கள் அப்படியே நின்றன.

தகவல் அறிந்ததும் பாம்பன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் குகனேசுவரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பாலத்தில் கவிழ்ந்து கிடந்த வேன் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

அதன்பிறகு, போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து பாம்பன் முன்னாள் ஊராட்சி தலைவர் பேட்ரிக் கூறியதாவது:-

பாம்பன் ரோடு பாலத்தில் முன்பு வழுவழுப்பான சாலையாக இருந்ததால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஜனாதிபதி வருகையின்போது அவசர அவசரமாக இந்த வழுவழுப்பான சாலை மாற்றப்பட்டு புதிய சாலை அமைக்கப் பட்டது.

ஆனால் அது முழுமையாக மாற்றப்படவில்லை. இதனால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. மேலும் தெருவிளக்குகள் எரியாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் கவனம் செலுத்தாமல் உள்ளனர். எனவே வழுவழுப்பான சாலையை முழுமையாக அகற்றவும், பாலத்தில் அனைத்து தெருவிளக்குகளும் எரியவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேகத்தடை இருப்பது தெரியாததாலும் விபத்து நடக்கிறது. அதையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story