மூளைச்சலவை செய்து அடைத்து வைத்திருப்பதாக புகார்: நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மதுரை டாக்டர், இளம்பெண் மீட்பு


மூளைச்சலவை செய்து அடைத்து வைத்திருப்பதாக புகார்: நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மதுரை டாக்டர், இளம்பெண் மீட்பு
x
தினத்தந்தி 8 Feb 2018 9:00 AM IST (Updated: 8 Feb 2018 8:32 AM IST)
t-max-icont-min-icon

மூளைச்சலவை செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட புகார் எதிரொலியாக, மதுரை டாக்டரும், இளம்பெண்ணும் நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்டனர்.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை சுப்பிரமணியசாவடி தெருவை சேர்ந்தவர் காந்தி (வயது 61). இவர், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுடைய மகன் மனோஜ் (32). இவர், மதுரை மாவட்டம் வெள்ளளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

மனோஜின் நெருங்கிய உறவினரான இளம்பெண் ஒருவர் மதுரையில் வசித்து வந்தார். பிளஸ்-2 வரை படித்துள்ள அவரும், மனோஜும் மதுரையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று வந்தனர். இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென அவர்கள் 2 பேரும் மாயமாகி விட்டனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரும், திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து காந்தி, ஈஸ்வரி ஆகியோர் அங்கு சென்றனர். தங்களது மகன் மற்றும் உறவுப்பெண்ணை ஆசிரமத்தை விட்டு வெளியேற்றுமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் 2 பேரும், கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பதாக ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் காந்தி புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தனது மகன், உறவுப்பெண்ணை மூளைச்சலவை செய்து பிடதி ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்று மனோஜையும், அந்த இளம்பெண்ணையும் மீட்டனர். பின்னர் அவர்கள், பெரியகுளத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இருவரும் காவி உடை அணிந்து சன்னியாசி போல காட்சி அளித்தனர்.

அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்களை யாரும் மூளைச்சலவை செய்து கட்டாயப்படுத்தவில்லை என்றும், தங்களது விருப்பப்படியே ஆசிரமத்தில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தனர். பிறகு அவர்கள் தேனி மாஜிஸ்திரேட்டு சுந்தரி முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்ல மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். 

Next Story