மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் முழுமையாக சேதமடைந்துள்ளது


மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் முழுமையாக சேதமடைந்துள்ளது
x
தினத்தந்தி 8 Feb 2018 3:15 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் முழுமையாக சேதமடைந்துள்ளது என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

மதுரை,

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் முழுமையாக சேதமடைந்துள்ளது, தொடர்ந்து தீயின் வெப்பம் தாங்காமல் மேற்கூரையில் இருந்து கற்கள் பெயர்ந்து விழுந்த வண்ணம் இருந்தன. நேற்று முன்தினம் இரவு பசுபதீஸ்வரர் சன்னதி அருகே மேற்கூரையில் இருந்து கற்கள் பெயர்ந்து விழுந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேற்று கோவிலில் ஆய்வு நடத்தினார். பின்பு அவர் கூறியதாவது:-

தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக ஆயிரங்கால் மண்டபம், தங்கத்தேர், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும் பழைய மண்டபம் ஆகியவற்றில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. அனைத்து துறைகள் இணைந்து சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை ஆணையாளர் உத்தரவின்பேரில், 12 பேர் கொண்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தினால் பாதிப்பு ஏற்பட்ட கட்டிடங்களை மீண்டும் சரிசெய்து கட்டவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீர வசந்தராயர் மண்டபம் தீ விபத்தில் முழுமையாக சேதமடைந்துள்ளது. அந்த மண்டபத்தை மீண்டும் கட்டுவதற்கு இக்குழுக்களின் மூலம் சிறப்பான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவில் வளாகத்தில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தை தவிர வேறு எந்த ஒரு பகுதிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பொதுமக்கள் எந்த ஒரு வதந்தியையும் நம்பி அச்சமடைய வேண்டாம்.

உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை பாதுகாப்பதே மாவட்ட நிர்வாகத்தின் முதல் கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story