மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை + "||" + Life imprisonment for the wage worker

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் சந்திரமோகன்(38). கூலி தொழிலாளி. இவருக்கும் புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அந்த பெண்ணுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் நாவற்குளத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.


இந்தநிலையில் கடந்த 1.12.2016 அன்று நாவற்குளத்துக்கு வந்திருந்த கள்ளத்தொடர்பு வைத்துள்ள அந்த பெண்ணை பார்ப்பதற்காக சந்திரமோகன் சென்றார். அப்போது வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள். இதில் சபலமடைந்த சந்திரமோகன் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையறிந்த அந்த பெண் தனது மகளை சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவள் கர்ப்பமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமையை டாக்டர்களிடமும், தனது தாயிடமும் தெரிவித்த போது சந்திரமோகன் இதற்கு முன்பும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறினாள்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சந்திரமோகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி ஜூலியட்புஷ்பா குற்றம் சாட்டப்பட்ட சந்திரமோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து சந்திரமோகன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கல்வி மற்றும் விடுதியில் தங்கி படிக்கும் செலவுக்காக தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி ஜூலியட்புஷ்பா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் இந்த நிதியை கல்விசெலவுக்கு வழங்குமாறும் மேற்கண்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.