மயிலம் அருகே கிராம நிர்வாக அலுவலர் கொலை: கள்ளக்காதலனுடன் பெண் கைது


மயிலம் அருகே கிராம நிர்வாக அலுவலர் கொலை: கள்ளக்காதலனுடன் பெண் கைது
x
தினத்தந்தி 8 Feb 2018 11:00 AM IST (Updated: 8 Feb 2018 10:27 AM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது 42). மயிலம் அடுத்துள்ள கொணமங்கலம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயந்தி (35) என்கிற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுந்த ஒரு புகாரின் அடிப்படையில் பஞ்சநாதன் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தார். பஞ்சநாதனுக்கு உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக மீண்டும் பணியில் சேர்வதற்கான அழைப்பு வந்தது. ஆனால் அவர் பணியில் சேராமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் மயக்க நிலையில் இருந்த பஞ்சநாதனை அவருடைய மனைவி மற்றும் அதேபகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் ஆகிய 2 பேரும் ஆட்டோவில் ஏற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது பஞ்சநாதன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக டாக்டர்களிடம் ஜெயந்தி கூறினார். உடனே பஞ்சநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பஞ்சநாதனின் தம்பி விஜயகுமார் மற்றும் உறவினர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, பஞ்சநாதனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இதுகுறித்து விஜயகுமார் தனது அண்ணனின் சாவில் தனக்கு சந்தேகம் உள்ளதாக மயிலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, பஞ்சநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஜெயந்தியும், அவருடைய கள்ளக்காதலனான ஆட்டோ டிரைவர் சண்முகமும் சேர்ந்து பஞ்சநாதனை கொலை செய்தது தெரியவந்தது.

இந்தநிலையில், நேற்று மாலை ஆட்டோவில் அவர்கள் இருவரும் சென்னைக்கு தப்பி செல்ல முயன்ற போது மயிலம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சண்முகம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் கடந்த 10 ஆண்டுகளாக எனது சொந்த ஊரான ஜக்காம்பேட்டையில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனது ஆட்டோவில் ஜெயந்தி அடிக்கடி பயணம் செய்வார். அப்போது அவர் எனக்கு அறிமுகமானார். இதன் பின்னர் தான், அவர் எனது தூரத்து உறவு முறையில் அத்தை என்பதை தெரிந்து கொண்டேன்.

இதனால், நான் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தேன். அப்போது அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று முடிவு செய்து, அவருக்கு தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தேன். அதற்கு நான் பணம் வாங்கியது இல்லை.

இதன் மூலம் அவருக்கு என்மீது பாசம் ஏற்பட்டது. ஒருநாள் பஞ்சநாதன் வீட்டில் இல்லாத நேரத்தில் சென்றேன். அப்போது ஜெயந்தியை வற்புறுத்தி, அவருடன் உறவு கொண்டேன். அதன் பின்னர் நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்தோம். இந்தநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜெயந்தியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டேன்.

இதுபற்றி பஞ்சநாதன் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் எங்களை அழைத்து விசாரித்தனர். அப்போது பஞ்சநாதன் தனது 3 பெண் குழந்தைகளின் நலன் கருதி, ஜெயந்தியை ஏற்றுக் கொண்டார். நானும் ஜெயந்தியை தொல்லை செய்ய மாட்டேன் என போலீசாரிடம் கூறிவிட்டு சென்று விட்டேன்.

ஆனாலும் என்னால், ஜெயந்தியை மறக்க முடியாமல் தவித்தேன். இந்நிலையில் மீண்டும் அவருடனான உறவை புதுப்பித்துக்கொண்டேன்.

இதற்கிடையே பஞ்சநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால், மனமுடைந்து அடிக்கடி மது குடித்து வந்தார். இதை எனக்கு சாதகமாக்கி, பஞ்சநாதனுக்கு நான் மது வாங்கி கொடுத்தேன். பின்னர் இருவரும் வீட்டிலேயே மது குடிப்போம். பஞ்சநாதன் அதிகபோதையில் இருக்கும்போது, ஜெயந்தியுடன் உல்லாசமாக இருப்பேன்.

இது அவருக்கும் தெரியும். ஆனால் நீ எனது மனைவியை வெளியில் அழைத்துச்சென்று அசிங்கப்படுத்தாதே என்று பஞ்சநாதன் கூறினார். இதையடுத்து, நான் அவர்கள் வீட்டிலேயே கடந்த 6 மாதமாக அவர்களுடனே வசித்தேன்.

இந்த நிலையில் நாங்கள் இருவரும் பழகுவதற்கு பஞ்சநாதன் திடீரென எதிர்ப்பு தெரிவித்தார். ஜெயந்தியுடனான தொடர்பை துண்டிக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை செல்போனில் என்னை தொடர்பு கொண்ட ஜெயந்தி தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாக கூறினார். இதையடுத்து நான் அன்று மதியம் ஜெயந்தி வீட்டுக்கு சென்றேன். அப்போது பஞ்சநாதன் குடிபோதையில், ஜெயந்தியை திட்டிக் கொண்டிருந்தார்.

இதனால் நானும் ஜெயந்தியும் பஞ்சநாதனை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். பின்னர் வீட்டில் இருந்த நைலான் கயிற்றை எடுத்து நான் பஞ்சநாதன் கழுத்தை இறுக்கினேன். ஜெயந்தி அவரை பிடித்துக் கொண்டார். வலியால் பஞ்சநாதன் அலறினார். இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தபோது, குடிபோதையில் கத்துகிறார் என கூறினோம்.

பின்னர், அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பின்னர் இருவரும் சென்னைக்கு ஆட்டோவில் தப்பி செல்ல முயன்றோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story