வளசரவாக்கத்தில் வங்கியில் பணம் எடுப்பவர்களிடம் கொள்ளையடிக்கும் கும்பல் கைது


வளசரவாக்கத்தில் வங்கியில் பணம் எடுப்பவர்களிடம் கொள்ளையடிக்கும் கும்பல் கைது
x
தினத்தந்தி 8 Feb 2018 11:00 AM IST (Updated: 8 Feb 2018 10:27 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் இருந்து பணம் எடுப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் வங்கியில் இருந்து பணம் எடுத்து செல்பவர்கள் மற்றும் வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி, நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கும் சம்பவம் நடந்து வந்தது.

இதையடுத்து உதவி கமிஷனர் சம்பத் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து சம்பவம் நடந்த பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவங்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டேனியல்(வயது 49) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளிகளான சென்னை ராஜமங்கலத்தை சேர்ந்த விமல்(40), பெஞ்சமின்(31) ஆகிய மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 3 பேரும், வங்கிகளில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு, அவர்களை பின்தொடர்ந்து சென்று அவர்களின் கவனத்தை திசை திருப்பி பை மற்றும் மொபட் சீட்டுக்கு அடியில் வைத்து இருக்கும் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர்.

இவ்வாறு இவர்கள் வளசரவாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கைவரிசையை காட்டி இருப்பதும் தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்தும் ரூ.9 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். 

Next Story