மாவட்ட செய்திகள்

தரமற்ற குடிநீர் வழங்குவதை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி அன்பழகன் எம்.எல்.ஏ. போராட்டம் + "||" + Struggle Against Provision of Non-Qualified Drinking Water

தரமற்ற குடிநீர் வழங்குவதை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி அன்பழகன் எம்.எல்.ஏ. போராட்டம்

தரமற்ற குடிநீர் வழங்குவதை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி அன்பழகன் எம்.எல்.ஏ. போராட்டம்
தரமற்ற குடிநீர் வழங்குவதை கண்டித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை பூட்டி அன்பழகன் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தினார்.
புதுச்சேரி,

புதுவை உப்பளம் தொகுதிக்கு பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் கலங்கிய நிலையிலும், தரமற்றதாகவும் வழங்கப்படுவதாக பொதுமக்கள் அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.


இதைத்தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று தனது தொகுதி மக்களுடன் சோனாம்பாளையம் சந்திப்பில் உள்ள பொதுப்பணித்துறை குடிநீர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அ.தி.மு.க. நகர செயலாளர் ரவீந்திரன், தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, மீனவர் அணி ஞானவேல், தொகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அவர்கள் கையில் தங்கள் தொகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் அடங்கிய பாட்டிலையும் எடுத்து வந்தனர்.

நேராக செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு வந்த அன்பழகன் எம்.எல்.ஏ. தான் கையோடு கொண்டுவந்திருந்த பூட்டை எடுத்து மெயின்கேட்டை பூட்டி வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் அவருடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கன்னியப்பன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களது சமரசத்தை அன்பழகன் எம்.எல்.ஏ. ஏற்கவில்லை.

இதுகுறித்த தகவல் உடனடியாக தலைமை பொறியாளர் சண்முகசுந்தரத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக அங்கு விரைந்து வந்தார். அவர் அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது உப்பளம் தொகுதி மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையேற்று அன்பழகன் எம்.எல்.ஏ. தனது போராட்டத்தை வாபஸ்பெற்றார். பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

உப்பளம் தொகுதி முழுவதும் பொதுப்பணித்துறை மூலம் வழங்கப்படும் குடிநீர் அசுத்தமாக உள்ளது. அனுமதிக்கப்பட்ட இரும்புசத்தின் அளவினைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. திருக்காஞ்சியில் இருந்து போர்வெல் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே உப்பளம் பகுதிக்கு அனுப்பப்படுகிறது.

இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சிறுநீரக நோய்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தண்ணீரை சுத்திகரித்து வழங்காமல் குடிநீர் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்காவிட்டால் எங்களது போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.