மாவட்ட செய்திகள்

பட்டாணி தரும் ஆரோக்கியம் + "||" + Peas Healthy

பட்டாணி தரும் ஆரோக்கியம்

பட்டாணி தரும் ஆரோக்கியம்
எல்லா ஊட்டச்சத்துக்களும் ஒன்றாக நிரம்பி உள்ளது பச்சைப் பட்டாணியில்.
டலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் ஒரே காய்கறியில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கவலையே வேண்டாம். அப்படி எல்லா ஊட்டச்சத்துக்களும் ஒன்றாக நிரம்பி உள்ளது பச்சைப் பட்டாணியில். தினமும் பட்டாணி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை பார்ப்போம்.

ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் கே 46 சதவீதம், ஒரு கப் பட்டாணியில் மட்டும் உள்ளது. வைட்டமின் கே எலும்புகளுக்கும், இதயத்துக்கும் தேவையான ஒன்று. ஆனால் நாம் வைட்டமின் கே தேவையைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. ஒரு கப் பட்டாணியில் 8 கிராம் வரையிலும் புரதம் நிறைந்திருக்கிறது. புரதம், நமது உடலுக்கு மிக அடிப்படையான ஒன்று. வயது மற்றும் பாலினத்தைப் பொருத்து, ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 19 கிராம் முதல் 56 கிராம் வரை புரதம் தேவைப்படுகிறது.

பட்டாணியில், நார்ச்சத்து மிக அதிகமாக இருக்கிறது. ஒரு கப் பட்டாணியில் 8 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற நார்ச்சத்தின் அளவில் 36 சதவீதத்தை ஈடு செய்கிறது. பட்டாணி, நமது உடலில் அலர்ஜியை நெருங்கவிடாது. குறிப்பாக பைசம் சபோனின், பைசோமோசைடு ஆகிய ஊட்டச்சத்துக் கள் நிரம்பியுள்ளதால், அலர்ஜி போன்ற ஒவ்வாமைகளை நம்மிடம் நெருங்கவிடாது.

பட்டாணி உங்கள் உடலுக்கு மட்டுமல்ல உங்கள் தோட்டத்திற்கும் உயிர்ச்சத்தைக் கொடுக்கிறது. பட்டாணியில் நிலத்துக்குத் தேவையான நைட்ரஜன் அதிகமாக இருக்கிறது. ஆகையால், தோட்டத்தில் பட்டாணிச் செடிகளை நடுவதன் மூலம், மண்ணுக்குத் தேவையான நைட்ரஜனும் கிடைக்கும். ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்தில் 16 சதவீதத்தை, ஒரு கப் பட்டாணியில் இருந்து பெற முடியும்.

மக்னீசியம் நமக்குத் தேவைப்படுகிற நுண்ணிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். அது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. பொதுவாக மக்னீசியம் சருமத்தில் உண்டாகும் சுருக்கங்களைத் தடுக்கிறது. அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு நாளைக்குத் தேவைப்படுகிற மக்னீசியத்தில் 22 சதவீதத்தை, 1 கப் பட்டாணி நிறைவு செய்கிறது.

பட்டாணியுடன் பார்லியும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, நமக்கு அதிக அளவிலான நார்ச்சத்தை தருகிறது. அவை நம் உடலுக்குத் தேவையான பீட்டா குளுக்கோனைத் தருகின்றன. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. அதிக அளவில் உடலில் தேங்கும் கொலஸ்ட்ரால், இதய நோய்களை உண்டாக்குகிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பீட்டா குளுக்கோன், பட்டாணியில் அதிக அளவு உள்ளதால், அது இதய நோயிலிருந்து நம்மைக் காக்கிறது. அதனால், உங்கள் காய்கறி பட்ஜெட்டில் பட்டாணிக்கு அதிக இடம் ஒதுக்குங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.