மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: தனியார் நிறுவன ஊழியர் பலி டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: தனியார் நிறுவன ஊழியர் பலி டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Feb 2018 2:15 AM IST (Updated: 9 Feb 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், தண்ணீர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், தண்ணீர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் பலியானார். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது47). தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டில் லோடு மேனாக உள்ளார். இவருடைய மகன் மணிகண்டன் (23). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி– இறக்குமதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் 3–ம் மைல் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நண்பரை சந்திக்க சென்றார்.

லாரி மோதி சாவு

 தூத்துக்குடி– பாளையங்கோட்டை ரோட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியை தாண்டி சென்ற போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரோட்டில் தூக்கி வீசப்பட்ட அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

டிரைவருக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் மணிகண்டன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி சென்ற லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story