கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுத்ததால் மாணவர்களை கண்டித்து பேராசிரியர்கள் சாலை மறியல்


கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுத்ததால் மாணவர்களை கண்டித்து பேராசிரியர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Feb 2018 4:30 AM IST (Updated: 9 Feb 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரிக்குள் நுழைய விடாமல் கேட்டை பூட்டி தடுத்ததால் மாணவர்களை கண்டித்து கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் உள்ள வேதியியல் பாடப்பிரிவு கட்டிடம், ஆய்வு கூடத்தை சீரமைக்க வேண்டும். கல்லூரியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முதல்வர் அறையின் முன்பு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. ஆனாலும் மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி கல்லூரிக்குள் இரவு, பகலாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இரண்டாவது நாளான நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்களை, கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்காததால் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் ஆத்திரம் அடைந்து கல்லூரிக்கு வந்த பேராசிரியர்களை கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் கதவினை இழுத்து பூட்டினர்.

இதனால் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளில் பேசிக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியர்கள், மாணவர்களை கண்டித்து கல்லூரி வாசல் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தங்களது கார்களை, கல்லணை-பூம்புகார் சாலையின் குறுக்கே மறித்து நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து கல்லூரிக்கல்வி மண்டல இணை இயக்குனர் மனோகரன், போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசமூர்த்தி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட போராசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது, தங்களை அவமானப்படுத்தும் விதமாக பேசி உள்ளே விட மறுத்த மாணவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும். இல்லை என்றால் எங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி, அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து மண்டல இணை இயக்குனர் மனோகரன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களது கோரிக்கைகளை வருகிற 28-ந் தேதிக்குள் நிறைவேற்றித்தரப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் கல்லூரிக்கல்வி மண்டல இணை இயக்குனர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கும்பகோணம் அரசு கல்லூரியில், வேதியியல் பிரிவு கட்டிடம் சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வருகிற 28-ந் தேதிக்குள் சீர் செய்து தரப்படும். பேராசிரியர்களையும் சமாதானப்படுத்தியுள்ளோம். வருகிற 12-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் கல்லூரி, வழக்கம்போல் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story