நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 9 Feb 2018 2:45 AM IST (Updated: 9 Feb 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.

பேட்டை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. இதன் மூலம் தினமும் 5 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

ரூ.5 கோடி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.5 கோடியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக கர்வனர் பன்வாரிலால் புரோகித், சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இதற்கான பணி குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் மின் நிலையம் அமைக்கும் பணி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

மின் உற்பத்தி தகடுகள்

இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் கணினி பிரிவுக்கு பின் பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு 3½ ஏக்கரில் சூரி ஒளி மின் உற்பத்தி தகடுகள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 616 தூண்களை நிறுவி அதன் மீது 3,080 சூரிய ஒளி மின் உற்பத்தி தகடுகள் பொருத்தப்படுகின்றன. இதில் தூண்கள் கான்கிரீட் போட்டு நிறுவப்பட்டு விட்டன. அவற்றில் ஒரு பகுதியில் நேற்று 200–க்கும் மேற்பட்ட தகடுகள் பொருத்தப்பட்டன.

துணைவேந்தர் ஆய்வு

இந்த பணிகளை பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் தலைமையில் உயர் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து பல்கலைக்கழக அலுவலர்கள் கூறுகையில், ‘‘ வருகிற 28–ந்தேதிக்குள் அனைத்து சூரிய ஒளி மின் உற்பத்தி தகடுகளும் பொருத்தப்பட்டு விடும். மேலும் அவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து எடுத்து செல்வதற்கு இன்வெட்டர்கள், டிரான்ஸ்பார்மர் ஆகியவையும் வரவழைக்கப்பட்டு பொருத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் சராசரியாக தினமும் 5 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும்.சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் பணி முடிந்த பிறகு, தனியாக மின் பாதை அமைக்கப்பட்டு பழைய பேட்டையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய துணை மின் நிலையத்தில் இணைக்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். இதன் மூலம் பல்கலைக்கழக மின்சார செலவு போக மீதி தொகை பல்கலைக்கழகத்துக்கு கிடைக்கும். இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் முன்னோடி திட்டம் ஆகும்’’ என்றனர்.


Next Story