மாணவனுக்கு பாலியல் தொல்லை: குழித்துறை அரசு விடுதி சமையல்காரர் கைது


மாணவனுக்கு பாலியல் தொல்லை: குழித்துறை அரசு விடுதி சமையல்காரர் கைது
x
தினத்தந்தி 9 Feb 2018 3:45 AM IST (Updated: 9 Feb 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை அரசு விடுதியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர். மேலும், உதவியாளரை தேடி வருகிறார்கள்.

குழித்துறை,

குழித்துறையில் அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்கி படிக்கும் 12 வயது மாணவனுக்கு, அங்குள்ள ஊழியர்கள் 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாணவன் எதிர்ப்பு தெரிவித்ததால் 2 பேரும் சேர்ந்து அடித்து, உதைத்தனர்.

இதில் காயம் அடைந்த மாணவன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றான். இதுபற்றி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ரமேஷிடம் புகார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் குழித்துறை விடுதிக்கு அதிரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

பணியிடை நீக்கம்

அப்போது, விடுதி சமையல்காரராக பணிபுரியும் பொன்மனை மங்கலத்தை சேர்ந்த விஸ்வாம்பரன் (வயது 45), சமையல் உதவியாளர் வில்சன் (52) ஆகியோர் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், அவர் உடன்பட மறுத்ததால் மாணவனை தாக்கியதும்         தெரிய வந் தது. இவர்கள் இருவரும் மேலும் பல மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து 2 பேரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

கைது

மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்–இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் விசாரணை நடத்தி அரசு விடுதியின் சமையல்காரர் விஸ்வாம்பரன், உதவியாளர் வில்சன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் விஸ்வாம்பரனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான வில்சனை தேடிவருகின்றனர்.


Next Story