திருச்சி-ஈரோடு மின்மயமாக்கப்பட்ட பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம்


திருச்சி-ஈரோடு மின்மயமாக்கப்பட்ட பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2018 4:15 AM IST (Updated: 9 Feb 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-ஈரோடு மின்மயமாக்கப்பட்ட பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

திருச்சி,

திருச்சி-ஈரோடு இடையே அகல ரெயில்பாதையில் தற்போது டீசல் என்ஜின் மூலம் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 141 கிலோ மீட்டர் தூரம் உடைய இந்த பாதையை மின்மயமாக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு இந்த பாதையில் மின்மயமாக்கல் பணி தொடங்கியது. இந்த பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. அதன்பிறகு ரெயில்வே அதிகாரிகள் இந்த பாதையில் ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சிறு, சிறு குறைகளை சரிசெய்தனர்.

இதைத்தொடர்ந்து திருச்சி-ஈரோடு இடையே மின்மயமாக்கப்பட்ட ரெயில்பாதையை, தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நேற்று முன்தினம் சிறப்பு சோதனை ரெயில் மூலம் ஈரோட்டில் இருந்து ஆய்வு செய்தார். அப்போது இந்த பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்பாதை, மின்கம்பிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து திருச்சி-ஈரோடு இடையே மின்மயமாக்கல் பணி திருப்திகரமாக உள்ளது என்றும், இதில் அதிவேகமாக ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 3.40 மணிக்கு அதிவேகமாக ரெயில் இயக்கும் சோதனை ஓட்டம் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் தொடங்கியது. முன்னதாக அதிவேக ரெயில் என்ஜின் முன்பு தண்டவாளத்தில் இலை போட்டு அதில் தேங்காய், பழம் வைக்கப்பட்டது. பின்னர் சூடம் பற்ற வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து ரெயில் என்ஜினுக்கு தீபம் காண்பிக்கப்பட்டது.

பின்னர் தேங்காய் உடைக்கப்பட்டு அதிகாரிகள், ஊழியர்கள் சாமி கும்பிட்டனர். அதன்பிறகு பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ரெயிலில் ஏறி ரெயிலை இயக்கி அதிவேக சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். கோட்டை ரெயில் நிலையத்தில் தொடங்கிய இந்த சோதனை ரெயில் இடையில் கரூர் ரெயில் நிலையத்தில் மட்டும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஈரோடு ரெயில் நிலையம் சென்றடைந்தது. 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story