மடங்களை அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்பு: மேல்-சபையில் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வெளிநடப்பு


மடங்களை அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்பு: மேல்-சபையில் பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 9 Feb 2018 3:30 AM IST (Updated: 9 Feb 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

மடங்களை அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்-சபையில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பெங்களூரு,

மடங்களை அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்-சபையில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சுகாதார சேவைகளை...


கர்நாடக மேல்-சபையின் 4-வது நாள் கூட்டம் நேற்று விதானசவுதாவில் கூடியது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா எழுந்து, மடங்களை அரசு தன்வசப்படுத்த எடுத்துள்ள முடிவு குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி வழங்குமாறு கோரினார்.

தொடர்ந்து பேசிய ஈசுவரப்பா, “இந்து மடங்கள் எங்களுக்கு கோவில்களை போன்றது. கல்வி, அன்னதானம், சுகாதார சேவைகளை மடங்கள் ஆற்றி வருகிறது. அந்த மடங்கள் மீது அரசு கண் வைப்பது ஏன்?. கர்நாடக அரசின் இந்துவிரோத போக்கை நாங்கள் கண்டிக்கிறோம்” என்றார்.

வாபஸ் பெற உத்தரவு

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்-மந்திரி சித்தராமையா, “மடங்களை எடுத்துக்கொள்ளும் எண்ணம் அரசுக்கு இல்லை. நாங்கள் அதுபோல் ஆலோசித்ததும் இல்லை. இதுபற்றி பொதுமக்களின் கருத்துகளை அறிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதை வாபஸ் பெற உத்தரவிட்டுள்ளேன்“ என்றார்.

மீண்டும் குறுக்கிட்ட ஈசுவரப்பா, “மடங்களை எடுக்கும் மாநில அரசின் இந்த அறிவிப்பால் மடாதிபதிகள் பீதியடைந்து உள்ளனர்“ என்றார். அப்போது குறுக்கிட்டு கொஞ்சம் காரமாக பதிலளித்த சித்தராமையா, “மடாதிபதிகளுக்கு எந்த பீதியும் ஏற்படவில்லை. இதில் அரசியல் நடத்த முயலும் உங்களுக்கு தான் பீதி ஏற்பட்டுள்ளது” என்றார்.

மன்னிப்பு கோர வேண்டும்

அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று, இந்த உத்தரவை அரசு வாபஸ் வாங்கினால் மட்டும் போதாது. மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து மீண்டும் பேசிய ஈசுவரப்பா, “கர்நாடகத்தில் துக்ளக் தர்பார் நடக்கிறது. மடங்களை எடுத்துக்கொள்ளும் எண்ணத்தை வெளிப்படுத்திய அரசு, பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

அப்போது அவை முன்னவரான மந்திரி சீதாராம், “அறிவிப்பு ஆணையை வாபஸ் பெறுவதாக அரசு கூறிவிட்டது. அதனால் இதுபற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார். மீண்டும் குறுக்கிட்டு பேசிய முதல்-மந்திரி சித்தராமையா, “இந்த அறிவிப்பு ஆணை நாங்கள் உருவாக்கியது இல்லை. ரமாஜோய்ஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழு தான் அதை உருவாக்கியது. அதை நாங்கள் அப்படியே அறிவிப்பு ஆணையாக வெளியிட்டோம். இதை நாங்கள் செய்ததால் இந்துவிரோதிகள் என்கிறீர்கள். அந்த குழுவினர் செய்தால் இந்து ஆதரவு என்று பா.ஜனதாவினர் சொல்வீர்கள்“ என்றார்.

வெளிநடப்பு

முதல்-மந்திரியின் பதிலை நிராகரித்த பா.ஜனதா உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி வெளிநடப்பு செய்தனர். ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Next Story