‘ஜூனியர் தடகள சாம்பியன் 2018’ போட்டி சிவந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை


‘ஜூனியர் தடகள சாம்பியன் 2018’ போட்டி சிவந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
x
தினத்தந்தி 9 Feb 2018 5:25 AM IST (Updated: 9 Feb 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

‘ஜூனியர் தடகள சாம்பியன் 2018’ போட்டியில் சிவந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

சென்னை,

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்கள் தேசிய அளவிலான ‘ஜூனியர் தடகள சாம்பியன் 2018’ போட்டிகள் நடைபெற்றன.

இதில் சென்னை ராமாபுரத்தில் இயங்கி வரும் சிவந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 4 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் பங்கேற்றனர்.

இவர்களில் பிளஸ் 2 மாணவர்களான ஆகாஷ் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், முகமது சல்மான் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், வெங்கடேஷ் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கப்பதக்கங்களை வென்றனர். அதே போல் வட்டு எறிதல் போட்டியில் 8-ம் வகுப்பு மாணவர் சேரலாதன் தங்கப்பதக்கம் வென்றார்.

மாணவியர் பிரிவில் பிளஸ் 2 மாணவி ஷப்ரனா ஆப்ரின், குண்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும், 10-ம் வகுப்பு மாணவி அஜிதா, ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

‘ஜூனியர் தடகள சாம்பியன் 2018’ போட்டியில், சிவந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 6 பேர் 5 தங்கப்பதக்கங்களையும், ஒரு வெள்ளி பதக்கத்தையும் பெற்று அகில இந்திய அளவில் சாதனைப்படைத்து உள்ளனர்.

இதன் மூலம் மாணவ-மாணவிகள் 6 பேரும், நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் வருகிற 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில உலக அளவிலான தடகளப்போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை பெற்று உள்ளனர்.

மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்க நேபாளம் செல்வதற்கான மொத்த செலவையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொண்டு உள்ளது.

போட்டிகளில் மாணவ-மாணவிகள் வெற்றி பெற அவர்களை ஊக்குவித்து, பயிற்சி அளித்த, சிவந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டனுக்கு, ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 2018’-ன் ‘சிறந்த உடற்கல்வி ஆசிரியர்’ என்ற விருது கிடைக்கப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story