தமிழக பட்ஜெட்டில் வியாபாரிகளுக்காக வணிக நலவாரியம் அமைக்கப்படும் என அறிவிக்க வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தல்


தமிழக பட்ஜெட்டில் வியாபாரிகளுக்காக வணிக நலவாரியம் அமைக்கப்படும் என அறிவிக்க வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Feb 2018 2:30 AM IST (Updated: 9 Feb 2018 11:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் பட்ஜெட்டில் வியாபாரிகளுக்காக வணிக நலவாரியம் அமைக்கப்படும் என அறிவிக்க வேண்டும் என்று ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

வள்ளியூர்,

தமிழக அரசின் பட்ஜெட்டில் வியாபாரிகளுக்காக வணிக நலவாரியம் அமைக்கப்படும் என அறிவிக்க வேண்டும் என்று ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

பேட்டி

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வள்ளியூருக்கு நேற்று வருகை தந்தார்.

இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வியாபாரிகளுக்கு ஒரே மாதிரியான லைசென்ஸ் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியுள்ளோம். உள்ளாட்சித்துறை அமைச்சர் உள்ளாட்சியில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வரும் வாரத்தில் அவரை சந்திக்க இருக்கிறோம். அந்த சந்திப்பிற்கு பின்னரும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் போராட்ட தேதி அறிவிக்கப்படும்.

பிரதமர் மோடி ஒரே இந்தியா, ஒரே சட்டம், ஒரே வரி என்ற நிலையை உருவாக்கி வருகிறார். ஆனால் வியாபாரிகள் பலவகைகளில் லைசென்ஸ் எடுக்க வேண்டியுள்ளது. அதனை மாற்றி வியாபாரிகளுக்கு ஒரே லைசென்ஸ் என்ற நிலைமையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்.

பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்

நடிகர்கள் ரஜினி, கமல் இணைந்தாலும் மக்கள் மனம் மாறவேண்டும். அவர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். நீரை சேமிக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர் வார நடவடிக்கை எடுக்கவேண்டும். நதிகளை இணைக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடனாளிகள் ஆக்கக்கூடாது

விவசாயிகளுக்கு கடனை கொடுத்து அவர்களை கடனாளிகள் ஆக்கக்கூடாது. அதற்கு பதிலாக மானிய விலையில் உரங்கள், பூச்சி மருந்துகளை வழங்க வேண்டும். தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து ஊடகங்கள்தான் விமர்சிக்கவேண்டும். தமிழக கோவில்களில் இடையூறாக இருக்கும் கடைகளை அகற்ற அந்த பகுதிகளில் உள்ள வணிகர்கள் தாமாக முன் வருகின்றனர். இந்தநிலையில் கோவில்களில் உள்ள கடைகளை திடீரென அகற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மத்திய அரசின் பட்ஜெட்டை நாங்கள் புறக்கணிக்கிறோம். வியாபாரிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது. தமிழக அரசின் பட்ஜெட்டில் வியாபாரிகளுக்காக வணிக நலவாரியம் அமைக்கப்படும் என அறிவிக்க வேண்டும். வரிவிகிதத்தையும் முறைப்படுத்தவேண்டும்.

இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

பேட்டியின்போது நிர்வாகிகள் சின்னத்துரை, ராஜ்குமார், முருகன், ராஜன், முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story