தூத்துக்குடியில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் 2 பேர் கைது நவீன கருவி-2 சொகுசு கார்கள் பறிமுதல்


தூத்துக்குடியில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் 2 பேர் கைது நவீன கருவி-2 சொகுசு கார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:00 AM IST (Updated: 9 Feb 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நேற்று வங்கி ஏ.டி.எம். கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நேற்று வங்கி ஏ.டி.எம். கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நவீன கருவிகள், 2 சொகுசு கார்கள் மற்றும் ஏராளமான போலி ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வங்கிக்கணக்கில் பணம் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் செல்லத்துரை மனைவி கஸ்தூரிபாய் (வயது 49). இவர் உடன்குடியில் உள்ள தனியார் பெண்கள் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய வங்கிக்கணக்கில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 4 முறை தலா ரூ.40 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் எடுத்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

கொள்ளையர்கள் கைது

வங்கிக்கணக்கில் இருந்து பணம் கொள்ளை நடந்திருப்பது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது திருச்சி கே.கே.நகரை சேர்ந்த சிவனேசுவரன் மகன் கிஷோக் (25), அவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட்டிபால் மகன் ஜெனோபர் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே, போலீசார் ஏ.டி.எம். கொள்ளையர்களான அவர்கள் 2 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

நவீன கருவி

போலீசார் நடத்திய விசாரணையில் கைதான 2 பேரும் கூறியதாவது:-

ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ என்ற நவீன கருவியை பொருத்தி நூதன முறையில் பணம் கொள்ளை அடிப்போம். சிறிய அளவில் சிப் உள்ள இந்த கருவியை, ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டு சொருகும் இடத்தில் பொருத்தி விடுவோம். அதன்மூலம் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளின் விவரங்களை முதலில் திருடுவோம். தொடர்ந்து, ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்களை கண்டுபிடிப்பதற்காக அந்த மையத்தில் ரகசிய கேமரா பொருத்தி விடுவோம்.

பின்னர் அந்த சிப்பில் பதிவான ரகசிய விவரங்களை கொண்டு, ஸ்கேனர் கருவி மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயார் செய்தும், கேமராவில் பதிவான ரகசிய எண்களை வைத்தும், வெளியூர்களில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணத்தை கொள்ளை அடிப்போம். இந்த முறையில்தான், ஆசிரியை கஸ்தூரிபாய் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த போது, அந்த எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி அவருடைய தகவல்களை திருடினோம். அதன் பின்னர் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயார் செய்து அவருடைய வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை கொள்ளை அடித்தோம், என தெரிவித்தனர்.

இந்த 2 பேரும் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். 2 பேரிடமும் அவர் விசாரணை நடத்தினார்.

மேலும் சிலருக்கு வலைவீச்சு

பின்னர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘இவர்கள் தமிழ்நாட்டில் ராஜபாளையம், நெல்லை, மன்னார்குடி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர். இவர்களிடம் இருந்து ஸ்கிம்மர் கருவி, கேமரா, 25-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம். கார்டுகள், ஸ்கேனர் கருவி மற்றும் 2 சொகுசு கார்கள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை வலைவீசி தேடி வருகிறோம், என்றார்.

அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர், சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் உடன் இருந்தனர். இதில் கைது செய்யப்பட்ட கிஷோக் என்பவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story