மீனாட்சி அம்மன் கோவில் கடைகள் அகற்றப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்து குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்கிறோம், பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் பேட்டி


மீனாட்சி அம்மன் கோவில் கடைகள் அகற்றப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்து குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்கிறோம், பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் பேட்டி
x
தினத்தந்தி 10 Feb 2018 3:30 AM IST (Updated: 10 Feb 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

மீனாட்சி அம்மன் கோவில் கடைகள் அகற்றப்பட்டதால், வாழ்வாதாரம் பறிபோய் விட்டது. குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்கிறோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதிக்கு செல்லும் வழிகளில் பூ உள்ளிட்ட பூஜைப் பொருட்கள், சாமி சிலைகள், வளையல்கள், பேன்சி சாமான்கள் விற்பனை செய்யும் 115 கடைகள் உள்ளன.

இதில் சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் கடந்த 2-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் அந்த பகுதியில் இருந்த பெரும்பாலான கடைகள் எரிந்து விட்டன. விபத்தில் சேதம் அடையாத மற்ற கடைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, வீரவசந்தராயர் மண்டபத்தில் எஞ்சியிருந்த 22 கடைக்காரர்களும் நேற்று கடைகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினார்கள்.

இது குறித்து அந்த பகுதியில் கடை வைத்திருந்த பாலாஜி என்பவர் கூறியதாவது:-

நாங்கள் 3 தலைமுறையாக கடை நடத்தி வருகிறோம். அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. கடையில் வளையல்கள், மஞ்சள், குங்குமம், சாமி படங்கள், சிலைகள் தான் விற்பனை செய்து வருகிறோம். திடீரென்று கடையை காலி செய்து கோவிலுக்கு வெளியே கொண்டு போய் விற்பனை செய்யுமாறு கூறினால் எப்படி? கோவில் அருகில் இருந்தால் தான் ஏற்புடையது. எங்கள் நிலை அறிந்து மதுரை மாவட்ட கலெக்டர் எங்களுக்கு கோவிலை சுற்றி எங்காவது கடைகளை ஒதுக்கித் தர வேண்டும்.

கோர்ட்டு 3 வாரத்திற்குள் வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள 42 கடைக்காரர்களுக்கும் வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே கோவில் நிர்வாகம் எங்களின் நிலை அறிந்து கோவிலுக்குள் மீண்டும் கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும். 100 சதுர அடி அளவுள்ள இந்த கடைகளில் ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் வரை வியாபாரம் நடக்கும். தற்போது கடை இல்லாததால் எங்களுக்கு அது பெரும் இழப்பு தான். எங்கள் குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். இந்த கடையை நம்பி தான் நாங்கள் அனைவரும் உள்ளோம்.

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு மரப்பலகை மூலம் பெட்டி அடித்து கடைகளாக உருவாக்கினோம். அதன் பின்னர் கட்சிகள் சார்பில் எந்த கடையும் கொடுக்கவில்லை. எனவே அரசு எங்களின் வாழ்வை எண்ணி மீண்டும் எங்களுக்கு கடைகளை அமைத்து தரவேண்டும். கடை எங்களிடம் தற்போது இல்லை என்பதால் நாங்கள் வாழ்க்கை இழந்து, குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்கிறோம். இனி வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று சிவனிடம் தான் முறையிட்டு வருகிறோம். கண்டிப்பாக எங்களுக்கு அவர் வழிகாட்டுவார்.

இவ்வாறு அவர் அழுது கொண்டே தெரிவித்தார்.

இது குறித்து தேங்காய், வாழைப்பழம் விற்பனை செய்யும் கடைக்காரர் முருகன் கூறியதாவது:-

நாங்கள் இந்த கடையை எனது உறவினர் ஒருவரிடம் வாங்கி 40 ஆண்டுகள் ஆகின்றன. கடையை காலி செய்யச் சொன்னதால், நாங்கள் அழுது கொண்டே தான் பொருட்களை எடுத்து வைக்கிறோம். நான் தேங்காய், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம் விற்பனை செய்து வருகிறேன். சிவன் கூப்பிட்டதால் தான் இங்கு கடை வைக்க வந்தோம். இத்தனை ஆண்டுகள் எங்களை கோவிலுக்குள் இருக்க வைத்தார்.

வெளியில் இருப்பவர்கள் கூறுவது போல் அடுத்த தலைமுறையினர் இந்த கோவிலை கலைநயம் மிகுந்த கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். அதற்கான இறைவனின் கட்டளைப்படி தான் தற்போது இந்த சம்பவம் நடக்கிறது. எனவே நாங்கள் இங்கிருந்து விடை பெறுகிறோம். எங்களுக்கு கோவிலுக்குள் மீண்டும் வந்து இறைவனுக்கு வேண்டிய பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் பாக்கியம் கிடைத்தால் அது கண்டிப்பாக நடக்கும். இந்த பகுதியில் அன்றாடம் வாழ்வாதாரம் செய்யும் கடைக்காரர்கள் உள்ளனர். அவர்கள் காலையில் வந்து இரவு தான் வீடு திரும்புவார்கள். அவர்களின் வாழ்க்கை தான் இனி என்ன ஆகப்போகிறது என்று தெரியவில்லை.

அவர்கள் கண்டிப்பாக மனநிலை பாதித்தவர்கள் போன்று இருப்பார்கள். எனவே அரசும், கோவில் நிர்வாகமும் எங்களின் நிலை அறிந்து எங்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.

கோவில் கடைக்காரர்கள் சங்கத்தலைவர் ராஜநாகுலு கூறியதாவது:-

மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமிக்கு தேவையான பூஜை பொருட்களை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு மூங்கில் தட்டில் வைத்து விற்பனை செய்து வந்தனர். அப்போது பூ, தேங்காய், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களும் விற்கப்பட்டன. நாட்கள் செல்லச்செல்ல எங்களுக்கு பல்வேறு அரசியல்வாதிகள் கோவில் நிர்வாகத்திடம் கூறி பலகைகளை கொண்டு கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார்கள்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை கட்டிய ரசீது எல்லாம் எங்களிடம் உள்ளது. தற்போது ஏற்பட்ட தீ விபத்து எங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அடியோடு தகர்த்து விட்டது. இனி நாங்கள் எங்கள் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவோம்? இந்த தொழிலை நம்பித்தான் எங்கள் குடும்பம் உள்ளது. எனவே அரசு, கோவில் நிர்வாகம், கோர்ட்டு ஆகியவை எங்களின் நிலை அறிந்து மீண்டும் கடைகளை வைக்க அனுமதி அளிக்க வேண்டும். அப்படி கோவிலுக்குள் கடைகளை வைக்க வேண்டாம் என்றால் அருகில் வேறு எங்காவது கடைகளை உருவாக்கித் தர வேண்டும். ஏன் என்றால் எங்களுக்கு இந்த தொழிலைத் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. கடைகளை காலி செய்யுங்கள் என்று கூறுவதால் பல குடும்பங்கள் நடுரோட்டில் தத்தளிக்கும் நிலை ஏற்படும்.

எனவே அரசு இதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story