தஞ்சை-சோளகம்பட்டி இடையே இருவழி பாதையில்


தஞ்சை-சோளகம்பட்டி இடையே இருவழி பாதையில்
x
தினத்தந்தி 10 Feb 2018 4:00 AM IST (Updated: 10 Feb 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை-சோளகம்பட்டி இடையே இருவழி பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரெயில் என்ஜினை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை வழியாகவும், தஞ்சையில் இருந்தும் 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 30-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, திருச்செந்தூர், திருநெல்வேலி, ராமேஸ்வரம், திருப்பதி, எர்ணாகுளம், மைசூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை வழியாகத்தான் முன்பு அதிக அளவில் தென்மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நாளடைவில் விழுப்புரம்-திருச்சி இடையேயான ரெயில்பாதை தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த வழியாக ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை-திருச்சி இடையே ஒருவழிப்பாதை என்பதால் ஒரு ரெயில் வந்தால் எதிர்திசையில் வரும் மற்ற ரெயில் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே தஞ்சை-திருச்சி இடையே இருவழி பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து மத்திய அரசு தஞ்சை-திருச்சி இடையேயான இருவழி பாதை திட்டத்துக்கு கடந்த 2011-12-ம் ஆண்டு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்துக்கு ரூ.450 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தஞ்சை- திருச்சி இடையே இடதுபுறமாக ஏற்கனவே மீட்டர்கேஜ் ரெயில்பாதை இருந்த தடத்தில் இந்த பாதை அமைக்கப்பட்டது. இதில் திருச்சி பொன்மலையில் இருந்து தஞ்சை வரை 49 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புதிய வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதை கட்டப்பட்டன. இதற்காக தஞ்சை-திருச்சி வழித்தடத்தில் உள்ள பூதலூர், சோளகம்பட்டி, திருச்சி திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில் பொன்மலையில் இருந்து பணிகள் தொடங்கி சோளகம்பட்டி இடையே பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டன. தஞ்சை மாவட்டம் சோளகம்பட்டியில் இருந்து தஞ்சை வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளும் தற்போது முடிவடைந்து ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி இடையே இருவழி பாதையில் நேற்று ரெயில்என்ஜின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. காலை 11.10 மணிக்கு தஞ்சையில் இருந்து என்ஜின் இயக்கப்பட்டது. சோளகம்பட்டியில் இருந்து தஞ்சை வரை 60 கி.மீ. வேகத்திலும், தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை 120 கிலோ மீட்டர் வேகத்திலும் ரெயில் என்ஜின் இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் பயணம் மேற்கொண்டு இந்த சோதனையை செய்தனர். தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி இடையேயான தூரம் 35 கிலோ மீட்டர் ஆகும். இந்த வழித்தடத்தில் ஆலக்குடி, பூதலூர், அயனாவரம் ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன.

இதன் பின்னர் இந்த வழித்தடத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்வார். அதன் பின்னர் தஞ்சை-திருச்சி இடையே இருவழி ரெயில் பாதையில் ரெயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story