டி.கல்லுப்பட்டி-ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பஸ் நிறுத்தம்; மாணவர்கள், கிராம மக்கள் சாலை மறியல்


டி.கல்லுப்பட்டி-ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு பஸ் நிறுத்தம்; மாணவர்கள், கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:30 AM IST (Updated: 10 Feb 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், மாணவர்கள், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரையூர்,

மதுரையை அடுத்த டி.கல்லுப்பட்டி பஸ்நிலையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தினசரி அரசு பஸ் சென்று வந்தது. இந்த பஸ் இயக்கத்தால் சுப்புலாபுரம், ஏ.பாறைப்பட்டி, சின்னசிட்டுலொட்டிபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் என பலதரப்பினர் பயனடைந்து வந்தனர்.

மேலும் இந்த பஸ்சில் தான் டி.கல்லுப்பட்டி பகுதிக்கு சென்றும் வருவார்கள். இந்தநிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 15 நாட்களுக்கு மேலாக இந்த வழித்தடத்தில் சென்று வந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து வந்தனர்.

மேலும் இந்த பஸ் இயக்கப்படாத நிலையில், திருமங்கலம்-ராஜபாளையம் செல்லும் வழியில் உள்ள கிராம விலக்குகளில் அரசு பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்ற உத்தரவு இருந்தும் அரசு பஸ்கள் நிற்காததால், பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் அவதியடைந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாணவர்கள், அந்த பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து நெடுஞ்சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த பேரையூர் போலீசார், வருவாய் துறையினர், போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஏ.பாறைப்பட்டி உள்ளிட்ட கிராம விலக்குகளில் பஸ் நிறுத்தப்படும் என்றும் டி.கல்லுப்பட்டி-ஸ்ரீவில்லிபுத்தூர் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பஸ் தொடர்ந்து இயக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story