பல லட்சம் ரூபாய் மோசடி: தனியார் சீட்டு நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


பல லட்சம் ரூபாய் மோசடி: தனியார் சீட்டு நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:45 AM IST (Updated: 10 Feb 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் சீட்டு நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

கோவை-திருச்சி ரோட்டில் திரிபுரா என்ற தனியார் சீட்டு நிறுவனம் உள்ளது. இங்கு மாதச்சீட்டு, வாரச்சீட்டு, தினசரி சீட்டு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை அங்கு சீட்டு செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிலருக்கு சீட்டு முடிந்துவிட்டது. எனவே அவர்கள் அந்த நிறுவனத்துக்கு சென்று முதிர்வு தொகையை கேட்டனர். அதற்கு அவர்கள் ஓரிரு நாட்களில் கொடுத்து விடுவதாக கூறினார்கள். ஆனால் குறிப்பிட்ட நாள் வந்ததும் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.

இதனால் பணம் செலுத்திய பொதுமக்கள் அந்த நிறுவனத்துக்கு மீண்டும் சென்று பணத்தை கேட்டதற்கு விரைவில் வங்கி கணக்கில் செலுத்திவிடுவோம் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் திரும்பி சென்றனர். ஆனால் பணம் செலுத்தவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று இரவு அந்த நிறுவனத்தின் முன்பு திரண்டு முற்றுகையிட்டதுடன், நிறுவனத்துக்குள் சென்று அங்கிருந்த ஊழியர்களை தாக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story