போலீஸ் காவலில் எடுக்கும் மனு மீதான விசாரணை; துணைவேந்தர் கணபதி கோர்ட்டில் ஆஜர்


போலீஸ் காவலில் எடுக்கும் மனு மீதான விசாரணை; துணைவேந்தர் கணபதி கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 10 Feb 2018 4:30 AM IST (Updated: 10 Feb 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை போலீஸ் காவலில் எடுக்கும் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இதையொட்டி அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோவை,

கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் சுரேஷ் என்பவரை பணிநிரந்தரம் செய்ய ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கடந்த 3-ந் தேதி துணைவேந்தர் கணபதி(வயது 67), பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரும் ஜாமீன் கேட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்மினோ அவர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் துணைவேந்தர் கணபதியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனு மீதான விசாரணையை 9-ந் தேதிக்கு(நேற்று) நீதிபதி தள்ளிவைத்தார். அதன்பேரில் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஆனால் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்மினோ நேற்று விடுமுறை என்பதால் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த மனு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகரன் முன்பு நேற்றுக்காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த துணைவேந்தர் கணபதியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது அரசு தரப்பு வக்கீல் சிவக்குமார், துணைவேந்தர் தரப்பு வக்கீல் ஞானபாரதி ஆகியோரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

துணைவேந்தரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் நீதிபதி மதுரசேகரன் விசாரணையை தொடங்கினார். அப்போது அவர் துணைவேந்தர் கணபதியை பார்த்து, ‘உங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த மனு தாக்கல் செய்துள்ளது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்.

அதற்கு துணைவேந்தர் கணபதி ‘தெரியும்’ என்று கூறினார். அதைத்தொடர்ந்து அவர் நீதிபதியிடம், ‘67 வயதான என்னை மூத்த குடிமகனாக கருத வேண்டும். சிறையில் மின்விசிறி இல்லை. குடிக்க சுடுதண்ணீர் கூட கொடுக்கவில்லை. இதனால் சாப்பிடுவதிலும் சிரமம் உள்ளது. இந்த மனு அடுத்த விசாரணைக்கு வரும் வரையாவது நான் உயிர் வாழ வேண்டும். எனவே என்னை மனிதனாக நினைத்து குடிக்க சுடுதண்ணீர் உள்பட அடிப்படை வசதிகளையாவது சிறையில் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதி மதுரசேகரன், ‘இது தொடர்பாக உங்கள் தரப்பு வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவும், உங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையும் நாளைமறுநாள்(திங்கட் கிழமை) தள்ளி வைத்துள்ளேன். அப்போது உங்கள் தரப்பு கோரிக்கைகளை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவியுங்கள்’ என்று கூறினார்.

அதன்பின்னர் துணைவேந்தரை கோவை சிறையில் இருந்து அழைத்து வந்த சப்-இன்ஸ்பெக்டரை அழைத்து, ‘துணைவேந்தருக்கு சட்டத்துக்குட்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறையில் செய்து கொடுக்க சொல்லுங்கள்’ என்று உத்தரவிட்டார்.

அதன்பின்னர் துணைவேந்தரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் மனு மீதான விசாரணையை நாளை மறுநாள்(12-ந் தேதி) தள்ளி வைத்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து துணைவேந்தர் கணபதியை போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது கோர்ட்டு அறையை விட்டு வெளியே வந்த அவர் ‘சதியை வென்று மீண்டு வருவேன்’ என்று ஆவேசத்துடன் சத்தம் போட்டார். அதன்பின்னர் துணைவேந்தர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஞானபாரதி நிருபர்களிடம் கூறுகையில், ‘துணைவேந்தர் வருமானவரி செலுத்துபவர். எனவே அதன் அடிப்படையில் அவருக்கு சிறையில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை நாளைமறுநாள்(திங்கட்கிழமை) நடக்கிறது’ என்றார். 

Next Story