தாளவாடி அருகே சத்து மாத்திரை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு மயக்கம்


தாளவாடி அருகே சத்து மாத்திரை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு மயக்கம்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:00 AM IST (Updated: 10 Feb 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள்

தாளவாடி,

தாளவாடி அருகே ஆசனூரை அடுத்துள்ள அரேபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 48 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு பள்ளியில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவில் எலுமிச்சை சாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவருக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அதை மாணவ-மாணவிகள் வாங்கி சாப்பிட்டார்கள்.

இந்த நிலையில் மாலையில் பள்ளி முடிந்து மாணவ-மாணவிகள் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். அப்போது அரேபாளையத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவிகள் பவானி, விஷ்ணுபிரியா, 6-ம் வகுப்பு மாணவிகள் கிருஷ்ணவேணி, நதியா, நிஷாந்தனி மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகள் கீர்த்தினி, ஷாலினி, அனுஷா ஆகியோர் வயிறு வலிப்பதாகவும், தலைசுற்றுவதாகவும் கூறினார்கள்.

ஆனால் நேற்று காலை அவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். இந்த நிலையில் வகுப்பறையில் உட்கார்ந்து பாடத்தை கவனித்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டது. ஒரு சிலர் மயக்கம் வருவதாக தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்கள்.

அதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு சென்று 8 பேருக்கும் முதல்-உதவி சிகிச்சை அளித்தார்கள். பின்னர் அவர்களை மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாளவாடி வட்டார மருத்துவ அலுவலர் கவுதம் சுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆகியோர் அரேபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்றனர். அங்கு அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த சத்து மாத்திரைகளை எடுத்து சோதனை செய்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது, ‘மாணவ-மாணவிகளுக்கு வழக்கமான உணவுடன் சேர்த்து கூடுதலாக ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.’ என்றனர்.

இதுகுறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, ‘மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சத்து மாத்திரைகள் முறையாக பரிசோதனைக்கு பின்னரே வழங்க வேண்டும்’ என்றனர். 

Next Story