24 லட்சம் டன் உணவுதானியம் உற்பத்தி செய்ய இலக்கு


24 லட்சம் டன் உணவுதானியம் உற்பத்தி செய்ய இலக்கு
x
தினத்தந்தி 10 Feb 2018 4:15 AM IST (Updated: 10 Feb 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் 24 லட்சம் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை இயக்குனர் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல வேளாண்மை தொடர்பான ஆய்வுக்கூட்டம் வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பேசுகையில்,“தஞ்சை மாவட்டத்தின் உணவு தானிய உற்பத்தி இலக்கான 8.13 லட்சம் டன்கள், திருவாரூர் மாவட்ட உணவு தானிய உற்பத்தி இலக்கான 10.54 லட்சம் டன்கள், நாகை மாவட்ட உணவு தானிய உற்பத்தி இலக்கான 5.29 லட்சம் டன்கள் என 3 மாவட்டங்களில் 23.96 லட்சம் டன்களும், கடலூர் மாவட்ட உணவு தானிய உற்பத்தி இலக்கான 8.18 லட்சம் டன்கள் ஆகியவற்றினை அடைந்திட வேளாண்மைதுறை அலுவலர்கள் உரிய தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும்.

பயறுவகை உற்பத்தியை அதிகப்படுத்திட ஊடுபயிர், கலப்பு பயிர் மற்றும் வரப்பு பயிராக உளுந்து, பச்சைபயறு சாகுபடி செய்திடவும் குறைந்த பரப்பளவில் அதிக மகசூல் பெற தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும். நெல் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் எண்ணெய் வித்து பயிர் களான எள், நிலக்கடலை மற்றும் ஆமணக்கு பயிர்களை பயிரிடவும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் தேவையினை குறைத்து குறைந்த அளவு நீரில் உளுந்து, பச்சைப்பயறு, கரும்பு, எண்ணெய்ப்பனை மற்றும் தென்னை போன்ற பயிர்களை சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்்தி சாகுபடி செய்ய வேண்டும்”என்றார்.

கூட்டத்தில் கூடுதல் வேளாண்மை இயக்குனர் கிருஷ்ணகுமார், ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம், வேளாண் இயக்குனரக துணை இயக்குனர்கள் சங்கர், ஜார்ஜ் மேனன் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர்கள் தனசேகரன், கோவிந்தன், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் கடலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story