பின்னலாடை துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும், கைத்தறி முதன்மை செயலாளர் பனீந்தர் ரெட்டி பேச்சு


பின்னலாடை துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும், கைத்தறி முதன்மை செயலாளர் பனீந்தர் ரெட்டி பேச்சு
x
தினத்தந்தி 10 Feb 2018 3:45 AM IST (Updated: 10 Feb 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஜவுளித்துறை கண்காட்சியில் கலந்துகொண்ட தமிழக கைத்தறி ஜவுளித்துறை முதன்மை செயலாளர், பின்னலாடை துறை சார்ந்த புதிய தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும் என கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேசன் மற்றும் நிப்ட்–டி கல்லூரி ஆகியவை சார்பில் ஜவுளித்துறை தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் அவினாசி அருகே உள்ள அணைப்புதூர்–பழங்கரை ரோட்டில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நேற்று காலை தொடங்கியது. இந்த கண்காட்சியை தமிழக கைத்தறி ஜவுளித்துறை முதன்மை செயலாளர் பனீந்தர் ரெட்டி ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். இதன் பின்னர் கண்காட்சியில் உள்ள அரங்குகளுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த புதிய தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்த ஆடைகளை அவர் பார்வையிட்டார்.

அந்த ஆடைகள் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் அவருக்கு விளக்கி கூறினார். இதன் பின்னர் கருத்தரங்கம் தொடங்கியது. இதில் நிப்ட்–டி கல்லூரியின் தலைவர் முருகானந்தம் வரவேற்று பேசினார். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரே‌ஷன் கன்வீனர் பிரபு தாமோதரன், ஜவுளித்துறை கமிட்டி உறுப்பினர் செயலாளர் அஜித் சவான் ஆகியோரும் பேசினர்.

இதன் பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக கைத்தறி ஜவுளித்துறை முதன்மை செயலாளர் பனீந்தர் ரெட்டி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியானது மூலப்பொருள், ஜவுளித்தொழில் நுட்பம், செயல்முறை மற்றும் துறை சார்ந்த சவால்கள் என பின்னலாடை துறையினருக்கு ஏற்ற வகையில், ஒன்றுக்கொன்று தொடர்புடைய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் மூலம் ஆடை தயாரிப்பாளர்கள், ஆடை ஆய்வு செய்யும் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. காட்டன் பின்னலாடை ரகங்களை பொறுத்தவரை திருப்பூர் தலைநகராக உள்ளது.

அரசானது ஜவுளித்தொழில்நுட்பங்களை ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. வருகிற காலங்களில் இது பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஜவுளித்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. மேலும், அதனை பின்பற்றியும் வருகிறது. இதுபோன்ற கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் அதிகமாக நடத்தப்பட வேண்டும். பின்னலாடை துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும். இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்படுவதன் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், ஐ.கே.எப். வளாகத்தில் 2 அரங்குகளில் கருத்தரங்குகள் தொடர்ந்து நேற்று மாலை வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜவுளித்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு, ஆடை தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது, ஆடைகளின் தரத்தை மேம்படுத்துவது, செலவினங்களை குறைப்பது உள்ளிட்ட தகவல்களை வழங்கினார்கள். அப்போது திருப்பூரை சேர்ந்த தொழில்துறையினருக்கு வியட்நாமில் ஆடை தயாரிப்பில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து, அங்கு ஆய்விற்கு சென்று விட்டு திரும்பி வந்த வல்லுநர்களும் தெரிவித்தனர்.

மேலும், ஆடை தயாரிப்பை மெருகேற்றுவது குறித்தும், வர்த்தக வாய்ப்புகள் குறித்தும் இலங்கையை சேர்ந்த ஜவுளித்துறையினர் தொழில்துறையினருக்கு தகவல்கள் வழங்கினர். இந்த கருத்தரங்குகளில் ஏராளமான தொழில்துறையினர் மற்றும் நிப்ட்–டி கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இன்று (சனிக்கிழமையும்) கண்காட்சி, கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் ஆடை தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து வல்லுநர்கள் தெரிவிக்க உள்ளனர்.

கண்காட்சியில் 20–க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கான ஆடைகள், இயற்கையான சாயத்தால் தயாரிக்கப்பட்ட ஆடைகள், நவீன வடிவமைப்புகளுடன் கூடிய சில்க் ஆடைகள், மேலும், நோயாளிகளுக்காக மருத்துவ குணங்களுடன் கூடிய ஆடைகள் உள்பட புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட ஏராளமான ஆடைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் போது ஈரப்பதம் குறைவு காரணமாக நூலின் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் அதனை தவிர்க்கும் விதமாக, பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் போது தண்ணீரை பீய்த்து அடித்து ஈரப்பதத்தை சீராக வைக்கும் வகையில் நவீன வடிவமைப்புடன், தொழில்நுட்பங்களுடன் எந்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதுபோல் துணியின் தரம், நேர்த்தி ஆகியவற்றை பரிசோதனை செய்யும் நவீன எந்திரமும் வைக்கப்பட்டிருந்தது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி துணியின் தரத்தை பரிசோதித்துக்கொள்ளலாம். இந்த எந்திரம் தயாரிக்கப்பட்டு முதல் முதலாக திருப்பூரில் இடம்பெற செய்யப்பட்டிருந்தது. இந்த எந்திரங்களை பலர் பார்த்தபடி சென்றனர்.

Next Story