இரவு நேரத்தில் இருளில் தவிக்கும் மலைகிராம மக்கள், சூரியசக்தி மூலம் மின்சாரம் வழங்க கோரிக்கை


இரவு நேரத்தில் இருளில் தவிக்கும் மலைகிராம மக்கள், சூரியசக்தி மூலம் மின்சாரம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 10 Feb 2018 3:00 AM IST (Updated: 10 Feb 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை-அமராவதி வனச்சரக பகுதியில் உள்ள மலை கிராமங்கள் இரவு நேரத்தில் இருளில் தவிக்கும் நிலை உள்ளது. இதனால் சூரியசக்தி மூலம் மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடத்துக்குளம்,

மரப்பட்டைகளை திரியாக்கி விலங்குகளின் கொழுப்பை எண்ணெயாக்கி எரிய வைத்த ஒற்றை விளக்கொளியில் ஊரே குதூகலித்திருந்தது ஒரு காலம். வேட்டை, விவசாயம் என பரபரப்பான வேலைக்கு நடுவில் போக்குவதற்கு அவர்களுக்கு பொழுது இருப்பதில்லை. ஆனால் காலங்களின் மாற்றத்தால் அசுர வேக விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

உணவுக்காக வேட்டையாடுவது தடுக்கப்பட்ட நிலையில் விவசாயமும் எந்திர மயமாகிப்போனது. பொழுது போக்குக்கு என்று உருவாக்கப்பட்ட ரேடியோ, டி.வி. போன்றவை மனிதனின் பொழுதுகளை ஆக்கிரமிக்கத்தொடங்கிவிட்டன. குறிப்பாக விஞ்ஞான வளர்ச்சியின் வியக்கத்தக்க பரிணாமமான இணையம் (இன்டர்நெட்) மனிதர்களின் பொழுதுகளை தின்று வேகமாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் பசுமைப்போர்வை போர்த்தி படுத்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் மக்களின் கிராமங்களில் விஞ்ஞான வளர்ச்சி வேகமாய் தன் ஆதிக்கத்தை பரப்பி இருக்கிறது.

வீட்டுக்கு வீடு இருசக்கர வாகனங்கள், ரேடியோ, டி.வி., மிக்ஸி, கிரைண்டர், செல்போன் போன்ற பொருட்களை மலை வாழ் மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால் அவர்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பது மின் தட்டுப்பாடு ஆகும். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் கோடந்தூர், பொறுப்பாறு, குழிப்பட்டி, மாவடப்பு, குருமலை, ஆட்டுமலை உள்ளிட்ட 18 மலை வாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம், தேன் எடுத்தல், தைலம் காய்ச்சுதல் போன்ற தொழில்கள் உள்ளன.

இந்த நிலையில் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப் பகுதியில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளதால் வனப் பகுதியில் மின் கம்பங்கள் அமைத்து கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே இயற்கை மின் சக்தியையே நம்பியிருக்க வேண்டிய நிலையில் மலை வாழ் கிராமங்கள் உள்ளன.

மலை வாழ் கிராமங்களில் அரசால் அமைத்து தரப்பட்ட சோலார் மின் விளக்குகள் வெகு விரைவில் பழுதடைந்து விடுகின்றன. இதனால் விளக்குகள் இல்லாத நிலையில் பெரும்பாலான மலை கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன.

இதன் காரணமாக இயற்கை மூலம் எளிதாகக் கிடைக்கக் கூடிய மின் சக்தியை உருவாக்கி மலை கிராமங்களுக்கு வழங்க வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பொதுவாக இயற்கை மின்சாரம் என்றால் காற்றின் வேகத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் காற்றாலை மின்சாரம், தண்ணீரின் வேகத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் நீர்மின்சாரம், சூரிய ஒளியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சூரியசக்தி மின்சாரம் முக்கிய பங்குவகிக்கிறது. இது தவிர தாவரக்கழிவுகளில் இருந்தும், கடல் நீரில் இருந்தும் என்று பல வகைகளில் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் எப்போதும் எளிதாக கிடைக்கும் சூரிய சக்தி, தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி மலை கிராமங்களுக்கு முழுமையாக மின்சாரம் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். தற்போது மலை வாழ் குடியிருப்புகளில் வாழும் மக்கள் சிறிய அளவிலான சோலார் தகடுகளை வாங்கி தங்கள் வீட்டு கூரைகளில் வைத்து அதன் மூலம் மின் சக்தியை பெற்று ஓரளவு பயன்படுத்தி வருகிறார்கள். இது ஒற்றை விளக்கை எரியவைப்பதற்கே போதுமானதாக இல்லை. இதையே அரசு ஒவ்வொரு மலை கிராமங்களிலும் உள்ள வீடுகளை கணக்கெடுத்து பெரிய அளவிலான சோலார் மின் தகடுகளை அமைத்து வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க் கின்றனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் கிட்டத்தட்ட 9 மாதங்கள் இங்குள்ள ஆறுகளில் நீர் வரத்து உள்ளது. மலைகளில் பாயும் ஆறுகளை பயன்படுத்தி நீர் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மலைவாழ் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க முயற்சி செய்யலாம். இது தொடர்பாக சோதனை முயற்சியாக பொறுப்பாறு மலைவாழ் குடியிருப்பில் சிறிய அளவிலான நீர் மின் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் பொறுப்பாறு மலைவாழ் குடியிருப்புக்கு சில கிலோமீட்டர்கள் மேலே பாயும் ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சிறு தொட்டியில் தேக்கப்படுகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலம் பள்ளமான பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று அந்த விசையின் மூலம் இயங்கும் மோட்டாரில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்த மின்சாரம் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு சில மாதங்களுக்குள்ளாகவே முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் முடங்கிப் போனது. இதனால் மீண்டும் கிராமம் இருளில் மூழ்கிப்போனது. ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீருடன் கலந்து வரும் மணலை வடிகட்ட முறையான திட்டம் இல்லாததால் மணல் சிக்கி மோட்டார் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இந்த திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து பெரிய அளவிலான நீர் மின் திட்டங்கள் அமைத்து மலைவாழ் கிராமங்களுக்கு ஒளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story