தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது


தஞ்சை பெரியகோவில் அகழியில் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 10 Feb 2018 4:00 AM IST (Updated: 10 Feb 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரிய கோவில் அகழியில் உள்ள குப்பையில் தீப்பிடித்தது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதி அடைந்தனர்.

தஞ்சாவூர்,

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி இடிந்ததில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி இரவில் உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த சோக சுவடு அடங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் தலவிருட்சமான ஆலமரத்தில் கடந்த கடந்த 7-ந் தேதி இரவு தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து நடந்த இந்த சம்பவங்களால் ஆன்மிக அன்பர்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று தீப்பிடித்தது. இந்த அகழியில் தஞ்சை நகரில் உள்ள பல்வேறு இடங் களில் இருந்தும் இரவு நேரங் களில் திருட்டுத்தனமாக குப்பைகளை கொட்டி விட்டு செல்கிறார்கள்.

இதனால் அதிகளவில் குப்பைகள் இங்கு தேங்கி விடுகின்றன. இந்த அகழியில் உள்ள குப்பையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரியகோவிலை சுற்றிலும் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது.

இந்த புகை மூட்டத்தால் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஒரு சில பக்தர்கள் தங்கள் செல்போனில் தீப்பிடித்து எரியும் காட்சியை படம் எடுத்துக்கொண்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் புகை மூட்டத்தை பார்த்து என்ன நடக்கிறது? என்று தெரியாமல் முதலில் திகைத்தனர். அதன் பின்னரே அகழியில் உள்ள குப்பையில் தீப்பிடித்தது என்பதை தெரிந்து கொண்டனர். அகழியில் உள்ள குப்பையில் பிடித்த தீ மேலும் பரவாமல் கோவில் பணியாளர்களும், பக்தர் களும் தண்ணீரை ஊற்றியும், மண்ணை கொட்டியும் அணைத்தனர். தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுத்து நிறுத்த சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அகழியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க கோவில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று பக்தர்கள்- பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story