உளுந்துக்கு கூடுதல் விலை வழங்க கோரி கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்


உளுந்துக்கு கூடுதல் விலை வழங்க கோரி கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Feb 2018 4:00 AM IST (Updated: 10 Feb 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்துக்கு கூடுதல் விலை வழங்க கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் கச்சிராயப்பாளையம் சாலையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளம், உளுந்து, மணிலா, நெல், பச்சை பயறு, எள் உள்ளிட்ட பல்வேறு வகை தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வார்கள்.

அந்த வகையில் நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளம், கம்பு, மணிலா, உளுந்து என மொத்தம் 1,828 தானிய மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

அவற்றில் 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் அதிகபட்சமாக ரூ.1,251-க்கும், குறைந்த பட்சமாக ரூ.1,169-க்கும், உளுந்து ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.4,969-க்கும், குறைந்த பட்சமாக ரூ.4,650-க்கும், கம்பு ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.1,379-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,365-க் கும் விற்பனையானது.

இவற்றை விழுப்புரம், தேனி, சேலம், ஆத்தூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து கொள்முதல் செய்தனர். நேற்று மட்டும் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.70 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரி கலைச்செல்வி தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 140-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை உளுந்து, நேற்று அதிகபட்சமாக ரூ.4,969-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் உளுந்துக்கு கூடுதல் விலை வழங்க கோரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு கள்ளக்குறிச்சி- கச்சிராயப்பாளையம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த உளுந்துக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து போலீசார் விவசாயிகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளுடன் பேசுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் விவசாயிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story