உளுந்தூர்பேட்டை அருகே டாக்டர்கள் பணிக்கு வராததை கண்டித்து அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் தர்ணா


உளுந்தூர்பேட்டை அருகே டாக்டர்கள் பணிக்கு வராததை கண்டித்து அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் தர்ணா
x
தினத்தந்தி 10 Feb 2018 4:30 AM IST (Updated: 10 Feb 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்கள் பணிக்கு வராததை கண்டித்து எலவனாசூர்கோட்டை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனைக்கு 200-க்கும் மேற்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்கள் தினசரி வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காகவும், பரிசோதனை செய்வதற்காகவும் வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்வதற்காக எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தனர். அப்போது டாக்டர்கள் இன்னும் வரவில்லை, மருத்துவமனையில் மின் வினியோகம் தடைபட்டுள்ளது. அதனால் சிறிது நேரம் காத்திருக்கும்படி செவிலியர்கள் கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இதை தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை கர்ப்பிணிகள் காத்திருந்தனர். இருப்பினும் டாக்டர்கள் வரவில்லை. இதனால் சிலர் தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றனர். இந்த நிலையில் நீண்ட நேரமாக காத்திருந்த கர்ப்பிணிகள் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த டாக்டர்கள் உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கர்ப்பிணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சிலருக்கு இன்றும் (அதாவது நேற்று), மற்றவர்களுக்கு நாளையும்(அதாவது இன்று) ஸ்கேன் செய்வதாக கூறினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணிகள் டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அனைவருக்கும் ஸ்கேன் செய்து சிகிச்சை அளிக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதை ஏற்ற கர்ப்பிணிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். டாக்டர்கள் நீண்ட நேர தாமதத்துக்கு பின்னரே மருத்துவமனைக்கு வந்ததால் நேற்று புறநோயாளிகளில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. கர்ப்பிணிகளின் தர்ணா போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story