மங்களூருவுக்கு வரும் அமித்ஷா, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச வேண்டாம் மந்திரி யு.டி.காதர் வேண்டுகோள்


மங்களூருவுக்கு வரும் அமித்ஷா, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச வேண்டாம் மந்திரி யு.டி.காதர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:15 AM IST (Updated: 10 Feb 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவுக்கு வரும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச வேண்டாம் என்று மந்திரி யு.டி.காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மங்களூரு,

மங்களூருவுக்கு வரும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேச வேண்டாம் என்று மந்திரி யு.டி.காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கர்நாடக உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரி யு.டி.காதர் நேற்று மங்களூரு அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீர்குலைக்க நினைக்க வேண்டாம்

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 18-ந்தேதி மங்களூருவுக்கு வர உள்ளார். அவர் மங்களூருவுக்கு வருவதை வரவேற்கிறோம். தேர்தல் வர இருப்பதால், அதற்காக பிரசாரம் செய்வதற்காக அமித்ஷா மங்களூரு வருகிறார். அதே சமயம் அமித்ஷாவுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துக்கொள்கிறேன். (அமித்ஷா) தேர்தல் தொடர்பாக நீங்கள் கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை நடத்துங்கள். பிரசாரம் செய்யுங்கள்.

ஆனால், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசவேண்டாம். அந்த செயலில் ஈடுபடவும் கூடாது. இங்கு அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். அதனை சீர்குலைக்க நினைக்க வேண்டாம். தற்போது தான் மங்களூருவில் அமைதி திரும்பி உள்ளது. அதனை கெடுக்க வேண்டாம்.

வேலைவாய்ப்பு முகாம்


காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மதக்கலவரத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடாது. ஏற்கனவே முதல்-மந்திரி சித்தராமையா இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் சமமாக தான் பார்க்கிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் மீண்டும் மதக்கலவரம் வராமல் பார்த்துக்கொள்ளும்படி சித்தராமையா தெரிவித்துள்ளார். அதில் நாங்கள் கவனமாக உள்ளோம். மக்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது.

மாநில அரசு சார்பில் மங்களூரு நகரில் வருகிற 17-ந்தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 89 நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. அதன்மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி, அதில் ரூ.25 லட்சத்தை வழங்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story